பிரபல இயக்குனரும், தளபதி விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது பண மோசடி செய்துவிட்டதாக, தயாரிப்பாளர் மணிமாறன் என்பவர் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

விஜய்யின் தந்தை, சமீப காலமாக, படங்கள் இயக்குவதை விட்டுவிட்டு திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‛டிராபிக் ராமசாமி' யின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்.

இந்த படம் வெளியீடு தொடர்பான விஷயங்களில் தான் எஸ்.ஏ.சந்திரசேர், 21 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக தயாரிப்பாளர் மணிமாறன் என்பவர் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது... எஸ்.ஏ.சி நடிப்பில் உருவாகியுள்ள, ட்ராபிக் ராமசாமி படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை தனது நண்பர் பிரமானந்தம் சுப்பிரமணியனுக்கு கொடுப்பதாக கூறி ரூ.21 லட்சம் முன்பணம் பெற்றுகொண்டார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

சில நாட்களுக்கு பிறகு தானே வெளியிட்டு கொள்வதாக கூறி பணத்தை பின்பு கொடுத்துவிடுவதாக சொல்லிய வார்த்தைகளில் இருந்து பின் வாங்கினார்.

ஆனால் ஒன்றரை வருடங்கள் கடந்தும் பணத்தை கொடுக்கவில்லை. இதுகுறித்து வெளிநாட்டில் உள்ள பிரமானந்தம் சுப்பிரமணியனுக்கு பதில் மணிமாறன் என்கிற நான், பல முறை சந்திரசேகரை சந்தித்து இதுகுறித்து பேசினேன். இந்நிலையில் மூன்று மாதத்தில் கொடுத்து விடுவதாக உறுதி கொடுத்தார்.

இதை தொடர்ந்து கடந்த 26ம் தேதி எஸ்.ஏ.சி அலுவலகத்திற்கு சென்று அவரை சந்தித்தேன். அப்போது அவர், வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய நண்பரை மிரட்டும் தொனியில்,  இங்கு வந்தால் திரும்ப போக முடியாது. உனக்கு ஏன் இந்த வெட்டி வேலை. உனக்கு ஏதாவது வேண்டும் என்றால் வாங்கிக் கொள் என்னை பற்றி உங்களுக்கு தெரியாதா" என்று கூறினார். 

எனவே எஸ்.ஏ.சந்திரசேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னுடைய புகார் மனுவில் தெரிவித்துள்ளார் மணிமாறன். இந்த விஷயம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.