பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் அலுவலகப் பணிகளும், மாணவர்களுக்கு கற்பித்தலும் தடைபட்டிருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆசிரியர்கள் போராட்டத்தால் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளை  நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் திருப்பூர் சின்னியகவுண்டன் புதூரில் உள்ள ஆரம்ப பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரையில் பயிலும் 94 மாணவ,மாணவிகள் ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளிக்கு வந்தும் நேற்றும் இன்றும் வெளியில் சும்மா உட்கார்ந்திருந்தனர்.

இதையடுத்து விஜய் ரசிகர்கள் தங்களுக்குள் பணம் வசூல் செய்து இரண்டு பயிற்சி ஆசிரியர்களை ஏற்பாடு செய்தனர். அவர்கள் மூலம் அந்தப் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகள் கல்விப்பயில ஏற்பாடு செய்தனர். இதனால் மாணவ மாணவியர்கள் தடையின்றி பயின்றனர்.

திருப்பூர் விஜய் ரசிகர்கள் இணைந்து செய்யும் ஆக்க பூர்வ பணிகளை பெற்றோர்கள் பாராட்டியுள்ளனர்.