நடிகர் விஜயின் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த ரசிகர்கள் மீது போலீஸார் லத்தி சார்ஜ் நடத்தி விரட்டி அடித்தது கோடம்பாக்கத்தில் பெரும்பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ரசிகர்களை போலீஸார் வெறிகொண்டு தாக்கிய செய்தி வலைதளங்களிலும் வைரலாகப் பரவி வருகிறது.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக வார்ப்பு கடற்கரை பகுதியில், நடிகர் விஜய்யின் 63வது திரைப்பட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அட்லி இயக்குகிறார். இப்படப்பிடிப்பை காண்பதற்காக விஜய் ரசிகர்கள்  நூற்றுக்கும் மேற்பட்டோர் காசிமேடு மீன்பிடி துறைமுக வார்ப்பு பகுதியில் நேற்று முன்தினம் மாலை திரண்டனர். படப்பிடிப்பில் பிசியாக இருந்த விஜயால் அவர்களை சந்திக்க முடியவில்லை.

பொறுமையை இழந்த ரசிகர்கள் ஒரு கட்டத்தில்  விஜயை பார்க்கும் ஆர்வத்தில் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் முயன்றதால் ரசிகர்களுக்கும், காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம்  ஏற்பட்டது. அப்போது திடீரென போலீசார், ரசிகர்கள் மீது தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதில் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து ரசிகர்கள் கூறுகையில், “விஜயை  பார்ப்பதற்காக மாலை 4 மணியில் இருந்து காத்திருந்தோம். படப்பிடிப்பு முடியும்வரை கூட காத்திருந்து விஜயைப் பார்க்க நாங்கள் பொறுமையாகக் காத்திருந்தோம். ஆனால் போலீசார் எங்களை பார்க்க அனுமதிக்காமல், எங்களை அங்கிருந்து விரட்டி அடிப்பதிலேயே குறியாக இருந்து  எங்கள் மீது தடியடி நடத்தினர்” என்று வேதனையுடன் கூறினர்.