’எங்க பிறந்த நாளுக்கு நாங்க நல்லா செய்யிறோமோ இல்லையோ நீங்க நல்லா செய்யிறீங்க’ என்ற சந்தானத்தின் வசனத்தை தங்களது ரசிகர்களை நோக்கிச் சொல்லவேண்டிய நிலைக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள் நம்ம நடிகர்கள். ஏனெனில் அஜீத், விஜய் போன்ற நடிகர்களின் பிறந்த நாளுக்கு இலவச பிரியாணி தொடங்கி பல இலவசங்களைத் தடபுடலாக அறிவித்து அசத்துகிறார்கள் அவர்களது ரசிகர்கள்.

அந்த வகையில் தளபதி விஜயின் 46 வது பிறந்த நாளுக்கு புதுச்சேரியில்   அவரது படங்களை முழுவதும் ஒட்டிய பேருந்தில்  இலவசமாக பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் இருந்து பாகூர் வழியாக மதகடிப்பட்டு செல்லும் அறிவழகன் என்ற தனியார் பேருந்து முழுவதும் விஜய் படங்களின் ஸ்டிக்கர்களை ஒட்டி அலங்காரம் செய்துள்ளனர்.  இந்த பேருந்தில் இன்று முழுவதும் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியுடன் அதில் பயணம் மேற்கொண்டனர்.

புதுச்சேரிக்காரர்களை சேலம் ரசிகர்கள் இன்னொரு வலையில் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட்டுள்ளனர். அங்கு விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி விஷேசமாக த் துவங்கப்பட்டுள்ள ’தளபதி விஜய் விலையில்லா விருந்தகம்’ ஒன்றில் இன்று முதல் ஒரு வருடத்துக்கு தினசரி 109 பேருக்கு விலையில்லா காலை உணவு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.[ஞாயிறு விடுமுறை] ஆனானப்பட்ட அம்மா உணவகத்திலேயே ஒரு ரூபாய்,ரெண்டு ரூபாய் என டிபனுக்கு வசூலிக்கப்பட்ட நிலையில் முற்றிலும் இலவசம் என விஜய் ரசிகர்கள் அறிவித்திருப்பது பல ஊர்க்காரர்களை பேசாம சேலத்துல போய் செட்டில் ஆயிடலாமா? என யோசிக்கத் தூண்டியுள்ளது.