Vijay dont know about the difference between scientists and politicians

விஞ்ஞானிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகிறார் நடிகர் விஜய்!

’இந்தியா வல்லரசாக மாறுவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் விவசாயிகளுக்கான நல்லரசாக மாற வேண்டும்’ என நடிகர் விஜய் சமீபத்தில் ஒரு விழாவில் பேசியிருந்தது தெரிந்த விஷயம்.

புதிதாய் வரக்கூடிய நடிகர் ஒருவர் கருத்து சொன்னாலே பரபரப்பாகிவிடும் சூழலில் நடிகர் விஜய் ஒரு விஷயம் பற்றி பேசினால் பரபரப்பாகிவிடாதா என்ன!?

பரபரப்பானது…

‘விஞ்ஞானிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகிறார் நடிகர் விஜய்’ என அப்துல்கலாமின் ’விஷன் இந்தியா மூவ்மெண்ட்’ இயக்கத்தின் பொன்ராஜ் சமூகவலைதளத்தில் கொந்தளித்தது பரபரப்பின் இன்னொரு உச்சம்!

விஷயம் என்னவென்று விசாரித்தால் ‘விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் பேசும்போது என்ன பேசுகிறோம் என கவனித்து பேசவேண்டும். யாரோ எழுதிக் கொடுப்பதை படங்களில் வசனமாக பேசுவதுபோல் பொது நிகழ்ச்சி மேடைகளில் பேசுவது நல்லதல்ல.

‘இந்தியா வல்லரசாக மாறுவது என்பது அப்துல்கலாம் கனவு. அதற்கான முயற்சிகளை விஞ்ஞானிகள் சரியாகவே செய்துகொண்டிருக்கிறார்கள்.

நல்லரசாக மாற்ற வேண்டியது அரசியல்வாதிகளின் கைகளில்தான் இருக்கிறது. ஆனால், அவர்களோ ஊழலில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள்’ என்கிற ரீதியில் காரசாரமாக தன் கருத்தை தெரிவித்திருப்பது தெரியவந்தது.

’விவசாயிகளுக்காக எந்த பிரபலங்களும்முன்வந்து குரல் கொடுக்காதபோது திரைப்பட நடிகர் விஜய் குரல் கொடுத்ததை கொச்சைப்படுத்தாதீர்கள். 

அவராவது குரல் கொடுத்தாரே என்று விவசாயிகள் சற்றே நிம்மதி அடைந்த தருணத்தில் நீங்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறீர்கள்.

அவர் விஞ்ஞானத்தையோ, இந்தியா வல்லரசு ஆவதையோ வேண்டாம் என்ற பொருள் படும் அர்த்தத்தில் கூறவில்லை’ என பொன்ராஜின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

இந்த கருத்துகளெல்லாம் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் தரப்போவதில்லை என்பதுதான் யதார்த்தம்!