கேரளாவுக்கு நடிகர் விஜய் 70 லட்சம் ரூபாய் வெள்ள நிவாரணம் நிதி கொடுத்ததாகவும், ரசிகர் மன்றங்கள் மூலம் 70 லட்சம் ரூபாய் அளவிற்கு நிவாரண உதவிகள் வழங்கியதாகவும் இருவேறு தகவல்கள் உலவுவதால் இந்த விவகாரத்தில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. கேரளா வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அனைவரும் நிதி உதவி வழங்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து பிரபலங்கள் தொடங்கி சாமான்யர்கள் வரை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தொடர்ந்து நிதி உதவி வழங்கி வருகின்றனர்.

 

தமிழகத்தில் இருந்து அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், நடிகர்களும் பினரயி விஜயனை நேரில் சந்தித்து வெள்ள நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர். நடிகர் விக்ரம் தனது ரசிகர் மன்ற நிர்வாகி மூலமாக பினரயி விஜயனை சந்தித்து ரூ.35 லட்சம் நிவாரண நிதி வழங்கினார். இதற்கு அடுத்தபடியாக நடிகர் விஜய் சேதுபதி சுமார் 25 லட்சம் ரூபாய் நிதி அனுப்பினார். நடிகர் ரஜினி தனது பங்கிற்கு ரூ.15 லட்சம் கொடுத்திருந்தார். ஆனால் விஜய் எந்த உதவியும் செய்யாமல் இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. அந்த சமயத்தில் விஜய் 15 கோடி ரூபாய் வெள்ள நிவாரணம் கொடுத்துள்ளதாக சிலர் வதந்தி பரப்பினர்.

இந்த நிலையில் திடீரென சன்நியுஸ் தொலைக்காட்சி கடந்த செவ்வாயன்று செய்தி ஒளிபரப்பியது. அதனை தொடர்ந்து வேறு சில தொலைக்காட்சிகளும் செய்தி ஒளிபரப்பின. விஜய் கேரள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 70 லட்சம் அனுப்பியுள்ளதாக சன் நியுஸ் செய்தியில் கூறியதையே பல்வேறு ஊடகங்களும் ஒளிபரப்பின. ஆனால் அது தொடர்பாக விஜய் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும் விஜயின் பி.ஆர்.ஓவை தொடர்பு கொண்ட போது அவரும் தனக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்று பதில் அளித்தார். விஜய் ரசிகர் மன்றத்தில் தலைவர் புஸ்ஸி ஆனந்தும் கேரளாவிற்கு விஜய் நிவாரண நிதி கொடுத்தது பற்றி பேச மறுத்துவந்தார். இந்த நிலையில் திடீரென சில ஆன்லைன் செய்தி நிறுவனங்கள் விஜய் கேரளாவில் உள்ள தனது ரசிகர் மன்றம் மூலமாக 70 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளதாக செய்திகள் வெளியிட்டன.

அதாவது ஒவ்வொரு மாவட்ட தலைமை விஜய் மன்றத்தின் வங்கி கணக்குகளிலும் நடிகர் விஜய் தலா 3 லட்சம் ரூபாய் செலுத்தி அந்த தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி செய்ய பயன்படுத்துமாறு விஜய்கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியிடப்பட்டன.இந்த தகவலையும் விஜயின் பி.ஆர்.ஓவும், ரசிகர் மன்ற தலைவரும் உறுதிப்படுத்தவில்லை. இதனால் விஜய் 70 லட்சம் ரூபாய் கேரளாவிற்கு வழங்கியதாக வெளியான தகவல் வதந்தி, விஜய் அப்படி எதுவும் பண உதவி செய்யவே இல்லை என்று சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் சர்ச்சையை ஏற்படுத்தினர். நடிகர் விஜய்க்கு கேரளாவில் ரசிகர் மன்றங்கள் இருப்பது உண்மை தான் என்றும் ஆனால் வங்கிகளில் கணக்கு வைத்து செயல்படும் அளவிற்கு அனைத்து மாவட்டங்களிலும் விஜய்க்கு ரசிகர் மன்றங்கள் அங்கு இல்லை என்று சிலர் கூறினர்.

இதற்கு விஜய் ரசிகர் மன்றத்தின் தலைவர் மூலமாக விஜய் பணத்தை செலவு செய்ய கொடுத்திருக்கலாம் எனறு அவரது ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர்.இப்படியாக கேரளாவிற்கு விஜய் நிவாரணம் வழங்கியதில் சர்ச்சை ஏற்பட்டுஅவர் கொடுத்தாரா? இல்லையா என்பதில் ஒரு தெளிவு இல்லாமல் இருக்கிறது. மேலும் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டிய விஜயின் பி.ஆர்.ஓவோ எந்த தகவலையும் வெளியிடாமல் அமைதி காக்கிறார். கேரளாவிற்கு எவ்வளவு நிதி கொடுத்துள்ளேன் என்பதை உண்மையில் விஜய் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அவர் சம்பாதித்த பணத்தில் எவ்வளவை வேண்டுமானாலும் அவர் நிவாரணமாக கொடுக்கலாம். அதனை வெளிப்படையாக கூற வேண்டிய நிர்பந்தம் இல்லை. ஆனால் விஜய் கொடுத்ததாக கூறப்படும் நிதியை மையமாக வைத்து தற்போது சர்ச்சை எழுந்துள்ளதால் அவர் தரப்பில் இருந்த ஒரு விளக்கம் கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.