ஆன்லைன் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய புகாரில் சிக்கிய நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர் ஆனார்.

Vijay Deverakonda ED Inquiry : ஆன்லைன் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய விவகாரத்தால் திரையுலகினர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு உள்ளனர். குறிப்பாக விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ், மஞ்சு லட்சுமி, ராணா, ஷியாமலா போன்ற வெள்ளித்திரை பிரபலங்கள், பல யூடியூப் நட்சத்திரங்கள், தொகுப்பாளர்கள் பெயர்களும் அந்த பட்டியலில் உள்ளன. இதனால் விஷயத்தை சீரியஸாக எடுத்துக் கொண்ட போலீசார் விசாரணையைத் தொடங்கி, ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே பல நட்சத்திரங்களுக்கு இந்த விவகாரத்தில் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

ஆன்லைன் சூதாட்ட செயலி விசாரணையின் ஒரு பகுதியாக, நடிகர் பிரகாஷ் ராஜை ED ஏற்கனவே விசாரித்துள்ளது. கடந்த மாதம் 30ஆம் தேதி அவர் விசாரணைக்கு ஆஜரானார். இந்த விவகாரத்தில் பிரகாஷ் ராஜ் தொடக்கம் முதலே வருத்தம் தெரிவித்து வருகிறார். விசாரணைக்குப் பிறகு, மீண்டும் ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்த மாட்டேன், அவற்றை நெருங்க மாட்டேன் என்று கூறினார்.

விஜய் தேவரகொண்டாவிடம் விசாரணை

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில் ED விசாரணை வேகம் எடுத்துள்ளது. நட்சத்திரங்கள் ஒவ்வொருவராக ED முன் ஆஜராகி வருகின்றனர். இந்த வழக்கில் இன்று (ஆகஸ்ட் 6) நடிகர் விஜய் தேவரகொண்டா ED விசாரணைக்கு ஆஜராகிறார். ஏற்கனவே விசாரணைக்கு வர ED நோட்டீஸ் அனுப்பியபோது, படப்பிடிப்புகள் காரணமாக வர இயலாது என்று அவர் பதில் அளித்தார். இதையடுத்து, ஆகஸ்ட் 6ஆம் தேதி ஆஜராகுமாறு விஜய் தேவரகொண்டாவுக்கு ED மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, விஜய் தேவரகொண்டா இன்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

மறுபுறம், டோலிவுட் நடிகர் ராணாவுக்கும் ED ஏற்கனவே விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், ராணாவும் படப்பிடிப்புகள் இருப்பதால் வர இயலாது என்று பதில் அளித்தார். இதையடுத்து, ஆகஸ்ட் 11ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ராணாவுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதேபோல், மஞ்சு லட்சுமிக்கு ஆகஸ்ட் 13ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ED அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த வழக்கில் நடிகை நிதி அகர்வால் உட்பட பல திரைப்பிரபலங்கள் ED விசாரணைக்கு ஆஜராக வேண்டியுள்ளது.