- Home
- Tamil Nadu News
- விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் திரைப்படத்திற்கு தடை.? களத்தில் இறங்கும் கட்சிகள்- காரணம் என்ன?
விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் திரைப்படத்திற்கு தடை.? களத்தில் இறங்கும் கட்சிகள்- காரணம் என்ன?
விஜய் தேவரகொண்டா நடித்த 'கிங்டம்' படத்தில் ஈழத்தமிழர்கள் மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும் என வைகோ, சீமான் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த திரைப்படம் கிங்டம், இந்த திரைப்படம் கடந்த 31ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இலங்கையின் இயற்கை வளங்களை அபகரிக்க ஒரு சர்வதேச பயங்கரவாத கும்பல் மலைவாழ் மக்களை பயன்படுத்துகிறது. இதை தடுக்க உளவாளியாக விஜய் தேவரகொண்டா அனுப்பப்படுகிறார். இது தான் கதையின் முக்கிய அம்சம் ஆனால் இந்த திரைப்படத்தில் ஈழத்தமிழர்களை மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இந்த திரைப்படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வௌியான தெலுங்கு திரைப்படமான கிங்டம், ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்து காட்டுகிறது.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து சென்றவர்களை ஈழத்தமிழர்கள் அடிமைகள் போலவும் தீண்ட தகாதவர்களாகவும் நடத்துவது போன்று இத்திரைப்படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இலட்சக்கணக்கான மக்கள் சிங்கள இன வெறி அரசால் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து இருக்கிறார்கள்.
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் துணையோடு சிங்கள அரசு தமிழ் இனப்படுகொலையை நடத்தியது. பன்னாட்டு நீதிமன்றத்தில் குற்றக்கூண்டில் கொடியவன் ராஜபக்சே உள்ளிட்ட கும்பலை நிறுத்தி தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று தமிழ்த் தேசிய இனம் போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வீரம் செறிந்த ஈழ விடுதலைப் போராட்டத்தையும், ஈழத் தமிழர்களையும் தவறாக சித்தரித்து திரைப்படங்கள் வெளியிட்டு வரலாற்றை சிதைக்கின்ற முயற்சி கடும் கண்டனத்திற்குரியதாகும்.
எனவே தமிழ்நாட்டில் கிங்டம் தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக வைகோ தெரிவித்துள்ளார். இதே போல நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் வெளியாகியிருக்கும் கிங்டம் திரைப்படத்தில் ஈழச்சொந்தங்களைக் குற்றப்பரம்பரைபோல, மிகத் தவறாகச் சித்தரிக்கும் வகையிலான காட்சியமைப்புகள் இடம்பெற்றிருக்கிற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
கருத்துச்சுதந்திரம் எனும் பெயரில், தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றை எப்படி வேண்டுமானாலும் திரித்து, தவறாகச் சித்தரிக்கலாம் என எண்ணுவதை ஒருநாளும் அனுமதிக்க முடியாது. ஈழத்தமிழர்கள் மலையகத்தமிழர்களை ஒடுக்கினார்களென அத்திரைப்படத்தில் காட்டப்படுவது வரலாற்றுத்திரிபு;
மிகப்பெரும் மோசடித்தனம். வரலாற்றில் ஒருநாளும் நடந்திராத ஒன்றை நடந்ததாகக் காட்டி, ஈழச்சொந்தங்களை மிக மோசமாகச் சித்தரிக்கும் இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ஆகவே, ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட கிங்டம் திரைப்படத்தை தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்வகையில் தமிழ்நாட்டின் திரையரங்குகளில் திரையிடுவதை முற்றாக நிறுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், திரையரங்குகளை முற்றுகையிட்டு, அத்திரைப்படத்தைத் தடுத்து நிறுத்துவோமென எச்சரிக்கிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.