’உங்க தல டிரைவர் வீட்டுக் கல்யாணத்துக்கெல்லாம் போவாராய்யா?’ என்று அஜீத் ரசிகர்களைக் கலாய்க்க ஒரு சான்ஸ் தரும் விதமாக, தன்னிடம் நீண்டகாலமாக கார் டிரைவராகப் பணியாற்றி வரும் ராஜேந்திரன் என்பவரின் மகள் திருமண வரவேற்புக்கு நடிகர் விஜய் தனது மனவியுடன் கலந்துகொண்டு வாழ்த்திய புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து இருவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்படுகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் விளையாட்டுப் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். இதற்கு ஏற்ற வகையில் தன்னுடைய உடலமைப்பையும் மாற்றியுள்ளார் விஜய். சென்னையில் தொடங்கிய முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. விரைவில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், சென்னையில் நேற்று (மார்ச் 4) நடைபெற்ற தன் கார் டிரைவர் ராஜேந்திரன் மகள் திருமண வரவேற்பில், தன் மனைவி சங்கீதாவுடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார் விஜய். அந்தப் புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், இயக்குநர் அட்லீ ஆகியோரும் இந்தத் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

முதலில் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கு டிரைவராகப் பணியாற்றிய ராஜேந்திரன் பின்னர் விஜயின் பெர்சனல் டிரைவராகி, அவரிடம் மட்டும் 15க்கும் மேற்பட்ட ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.