நடிகர் விஜய் ஆண்டனி, இயேசு கிருஸ்து மது குடித்ததாக, அண்மையில் கலந்து கொண்ட பட நிகழ்ச்சியில் பேசியதற்கு தற்போது தமிழ்நாடு கிருஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி 'ரோமியோ' பட விழாவில் இயேசு கிறிஸ்து மது குடிப்பார் என பேசியதற்கு, கிறிஸ்தவ சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் பன்முக திறமையாளராக இருக்கும் விஜய் ஆண்டனி, இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பின்னர் 'நான்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக 2016 ஆம் ஆண்டு, இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. அதேபோல் இவருடைய திரையுலக வாழ்க்கையில் இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சுமார் 8 ஆண்டுகளுக்குப் பின்னர், நடிகர் விஜய் ஆண்டனியே இயக்கி நடித்தது மட்டுமின்றி, இப்படத்தையும் தயாரித்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில், முதலுக்கு மோசம் இல்லாத அளவுக்கு வசூல் செய்தது. தமிழகத்தை விட பிச்சைக்காரன் 2 படத்திற்கு தெலுங்கு திரையுலகில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வெற்றியை, பிச்சைக்காரர்களுக்கு நட்சத்திர ஹோட்டலில் விருந்து கொடுத்து செலபிரேட் செய்தார் விஜய் ஆண்டனி.
அடுத்தடுத்து வித்தியாசமான கதைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் விஜய் ஆண்டனி, தற்போது 'ரோமியோ' என்கிற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியான போது, ஃபர்ஸ்ட் நைட் செட்டப்பில் கதாநாயகி, மிருணாளினி சரக்கு அடிப்பது போல் இருந்தது. இதைத் தொடர்ந்து 'ரோமியோ' பட குழுவினர் செய்தியாளர்களை சந்தித்த போது, இதுகுறித்த கேள்வி எழுபட்டது.

இதற்க்கு பதிலளித்த விஜய் ஆண்டனி, மது என்பதில் ஆண் - பெண் என வேறுபடுத்தி பார்க்க கூடாது. குடிப்பது அனைத்து பாலினருக்கும் பொதுவான ஒன்றுதான். முந்தைய காலத்தில் இருந்தே மது என்பது இருந்து வருகிறது. ஆனால் அதற்கு காலத்திற்கு ஏற்ற போல், நாம் தான் பெயரை மாற்றிக் கொள்கிறோம். புராணங்களில் கூட இயேசு கிறிஸ்து திராட்சை ரசத்தை குடித்துள்ளார். ராஜராஜன் சோழன் காலத்தில், சோம பானம் என இதை குடித்து வந்தனர் என கூறினார்.
தற்போது இவர் கூறிய இந்த வார்த்தை தான் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவரின் பேச்சுக்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு, தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, "திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி அவர்களுக்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பின் கடும் கண்டனம்". உலகெங்கும் வாழும் அனைத்து கிறிஸ்தவ பெருமக்களாலும் ஜாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினராலும் போற்றப்படக்கூடியவர் தேவகுமாரன் ஆகிய இயேசு கிறிஸ்து. கிறிஸ்தவர்களையும் இயேசு கிறிஸ்துவையும், இழிவுபடுத்தும் விதமாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் திராட்சை ரசத்தை போதை வஸ்துக்கு ஒப்பிட்டு இயேசு கிறிஸ்து மது குடித்தார் என்று பொதுவெளியில் பேசி, கிறிஸ்தவ சமூகத்தினரின் மனதை புண்படுத்திய நடிகர் விஜய் ஆண்டனி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவர் வீட்டு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
