குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் தெலுங்கு, கன்னடம், போன்ற பல்வேறு மொழிகளில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை காவேரி.

குறிப்பாக நடிகர் விஜய் நடித்த 'கண்ணுக்குள் நிலவு' படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார். மேலும் 'காசி' படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார். சமுத்திரம், கண்ணாடி பூக்கள்,  உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்து கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் நடிகை காவேரி.

தற்போது இவர் அவதாரம் எடுத்துள்ளார். மலையாள திரையுலகில், குறிப்பிட்ட சில படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்த இவர்,  எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லாததால், திரைப்படம் இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

உண்மை கதையை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்தப் படத்தை கே டூ கே என்கிற நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் டீசரை பிரபல இயக்குனர் கெளதம் மேனன் வெளியிட்டு படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும்,  படத்தில் நாயகனாக நடிக்க உள்ள நடிகர் மட்டுமே தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், நடிகை, மற்றும் துணை நடிகர் நடிகைகள்  தேர்வு தற்போது பரபரப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

பட வாய்ப்புகள் இல்லை என்றால், திரையுலகை விட்டு விலகி  நடிகைகள் பலர் தொழிலதிபராக மாறி உள்ள நிலையில், நடிகை காவேரியின் இந்த புது முயற்சிக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இருமொழிகளில் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.