கமலுக்காக ஒன்றிணையும் தல-தளபதி... காரணம் என்ன தெரியுமா?

நவம்பர 7ம் தேதி உலக நாயகன் கமல் ஹாசனின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாட அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் முடிவு செய்துள்ளது. 3 நாட்கள் விழாவை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை தனது பிறந்த நாளும், தந்தையின் இறந்த நாளும் ஒன்றாக வருவதால்,  முதலில் தந்தை ஸ்ரீனிவாசனின் உருவச்சிலையை சொந்த ஊரான பரமக்குடியில் திறந்துவைக்கிறார் கமல் ஹாசன். அடுத்த நாள் ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் இயக்குநர் இமயம் பாலச்சந்தர் உருவச்சிலையை திறந்துவைத்து மரியாதை செலுத்துகிறார். அன்று மாலை சத்யம் திரையரங்கில் கமலின் ஹேராம் திரைப்படம் திரையிடப்படுகிறது. படம் முடிந்த பிறகு ரசிகர்களுடன் கலந்துரையாடலில் பங்கேற்கிறார் கமல். 

அதன்பின்னர் நவம்பர் 9ம் தேதி மாலை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவிருந்த இளையராஜாவின் இசைக் கச்சேரி, நவம்பர் 17ம் தேதி நேரு விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களுக்கு கமல் ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். குறிப்பாக தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களான அஜித் மற்றும் விஜய்க்கு அழைப்பு அனுப்பியுள்ளார் கமல் ஹாசன். அல்டிமேட் ஸ்டாரான அஜித் தனது பட புரோமேஷன் நிகழ்ச்சிகள் உட்பட எவ்வித நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை என்று தீர்மானித்துள்ளார். இறுதியாக கலைஞர் கருணாநிதியின் பாராட்டு விழாவில் பங்கேற்ற அவர், ‘ஐயா என்னை ஃபங்சனுக்கு வரச்சொல்லி மிரட்டுறாங்கய்யா’என்று மேடையிலேயே புலம்பித் தீர்த்தார். 

அதிலிருந்து எந்த நிகழ்ச்சிகளிலும் அஜித் தலைகாட்டியது இல்லை. ஆனால் ’கமல் 65’ நிகழ்ச்சியில் கண்டிப்பாக பங்கேற்பேன் என கமல் ஹாசனுக்கு அஜித் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. 'ஒரு முடிவு எடுத்துட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்' என்ற மாஸ் வசனத்தின் சொந்தக்காரரான அஜித், கமல் ஹாசனுக்கு கொடுத்த வாக்கை கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதேபோன்று ’தளபதி 64’ படப்பிடிப்பில் பிசியாக உள்ள விஜய்யும், உலக நாயகனை வாழ்த்த ஒன்றிணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாக ஒன்றாக விழாக்களில் பங்கேற்காத தல, தளபதி இருவரும் கமல் ஹாசனுக்காக ஒன்றிணைந்தால் அது ஒரு வரலாற்று நிகழ்வாக இருக்கும். தமிழ் சினிமாவின் இருதுருவமான விஜய்யும், அஜித்தையும் ஒரே மேடையில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.