’நேர்கொண்ட பார்வை’படத்தின்  ஒரே ரொமாண்டிக் பாடலான ‘அகலாதே’ நாளை மாலை 6 மணிக்கு ரிலீஸாகவிருக்கிறது என்று அதன் தயாரிப்பாளர் ட்விட் பண்ணியிருக்கும் நிலையில்,’அஜீத்துடன் இணைந்து நடித்ததை மிகவும் பெருமையாகக் கருத்துவதாக நடிகை வித்யாபாலன் கூறியுள்ளார்.

இதுவரை ரீமேக் படங்களிலேயே நடிக்காத வித்யா பாலன், தயாரிப்பாளர் போனிகபூருக்காக,  ஒரு ரீமேக் திரைப்படம் மூலம் தமிழில் கால் பதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ’நேர்கொண்ட பார்வை’படத்தின் அனுபவம் குறித்தும் அஜித்துடன் நடித்தது குறித்தும்  வித்யா பாலன் பேட்டியளித்துள்ளார். இப்படத்திற்கு 3 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்திருந்த நிலையில் அவர் சுமார் பத்து நிமிடங்கள் மட்டுமே படத்தில் வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவரும் நிலையில், அதில் அஜித் குறித்த பல விஷயங்களை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்தி படமானபிங்க் திரைப்படத்தை பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. நேர்கொண்ட பார்வை திரைப்படம் அதற்கான வாய்ப்பாக அமையும். இந்தத் திரைப்படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தெரியவந்ததும் நான் உற்சாகம் அடைந்தேன். முதல் தமிழ் திரைப்படத்தில் அஜித்துடன் நடிக்கிறேன் என்பதே, எனக்கு எல்லாம் சரியாக கிடைப்பதாக தோன்றியதுஎன்று தெரிவித்தார்.

மேலும் அஜித் குறித்து பேசிய வித்யா பாலன், அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் கூட்டத்தைக் கொண்டுள்ள ஒரு நடிகர் என் முன்னால் மிகவும் எளிமையாக நடந்துகொண்டிருந்ததை என்னால் நம்பவே முடியவில்லை. நான் நடிப்பது அஜித் உடனா? அல்லது அஜித் மாதிரியான ஒரு ஆளுடனா என்ற சந்தேகம் கூட வந்தது. அஜித் அந்த அளவுக்கு எளிமையானவர். அவருடைய ரசிகர்கள் ‘தல’ என்ற  மாபெரும் பட்டம் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையிலும் இவ்வளவு எளிமையாக எப்படி இருக்கிறீர்கள் என்று முகத்துக்கு நேராகக் கேட்டபோது என்னிடம் அநியாயத்துக்கு வெட்கப்பட்டார் அஜீத்’என்கிறார் வித்யா பாலன்.