கணிதமேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடிக்கும் நடிகை வித்யா பாலனின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து மிகவும் பெருமையுடன் பதிவிட்டுள்ள அவர், தனது அபார கணித மூளையால் உலகையே திரும்பிப் பார்க்கவைத்த சீன்னஞ்சிறு கிராமப் பெண்மணி பாத்திரத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது’என்று தெரிவித்துள்ளார்.

பெங்களூருக்கு அருகே உள்ள சிறிய கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் சகுந்தலா தேவி. சிறுவயதில் குடும்ப சூழல் காரணமாக முறையான கல்வி பெறாத அவர், தானாகக் கணக்குகளைத் தீர்க்கப் பழகிக்கொண்டார். தொடர் இலக்கங்களைக் கொண்ட சிக்கலான கணக்குகளுக்கு கூட சில நொடிகளில் மனக்கணக்கில் தீர்வுகாண்பதில் வல்லவர்.பழைய நூற்றாண்டு ஒன்றின் தேதியை சொன்னால், மறுநொடியே அதன் கிழமையைச் சொல்லும் திறன் கொண்ட அவர், திறமைக்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்தவர். 2013 ஆண்டு தனது 83 வயதில் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

தற்போது இந்திய சினிமாவில் பிரபலங்களின் வாழ்க்கைக் கதைகள் அதிகம் படமாக்கப்படும் நிலையில், உலகின் வேகமான மனிதக் கணினி என்று அழைக்கப்படும் கணிதமேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை கதையும்  சினிமாவாகிறது. சகுந்தலா தேவியாக, நடிகை வித்யாபாலன் நடிக்க, கேரளாவைச் சேர்ந்த அனுமேனன் இயக்குகிறார். ரோனி ஸ்குருவாலா தயாரிக்கிறார்.

வரும் ஏப்ரலில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று லண்டனில் துவங்கியிருக்கும் நிலையில் ,...தனது அபார கணித மூளையால் உலகையே திரும்பிப் பார்க்கவைத்த சீன்னஞ்சிறு கிராமப் பெண்மணி பாத்திரத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. இந்தக் கணிதமேதையின் பாத்திரத்தில் நடிப்பதைப் பெருமையாக நினைக்கிறேன்...என்று ட்விட் பண்ணியிருக்கிறார். ஜெயலலிதா பாத்திரத்திற்கு முதலில் பலரால் அணுகப்பட்டவரும் இதே வித்யாபாலன் தான். ஆனால் இவர் யாருக்கும் ஓ.கே.சொன்னதாகத் தெரியவில்லை.