சமீபத்தில் வெளியான விடுதலை பாகம் 2 திரைப்படத்தில் வெட்டப்பட்ட 21 நிமிடங்கள் காட்சிகளை சேர்த்து மீண்டும் படக் குழு வெளியிட முடிவு செய்துள்ளது.

விடுதலை முதல் பாகம் 

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிய மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘விடுதலை’. மலை கிராமம் ஒன்றிற்கு போலீஸ் அதிகாரியாக செல்லும் சூரி அங்கு தேடப்படும் முக்கிய குற்றவாளியான பெருமாள் வாத்தியாரை கைது செய்கிறார். பெருமாள் வாத்தியார் என்பவர் யார்? அவரை தனிப்படை அமைத்து தேடப்படுவதற்கான காரணம் என்ன? என்ற சஸ்பென்ஸ் உடன் முதல் பாகம் நிறைவடைந்து இருந்தது. முதல் பாகத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், இளவரசு, பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தொடர்ந்து வெற்றிமாறன் இந்த கதையின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருந்தார்.

விடுதலை இரண்டாம் பாகம்

இரண்டாம் பாகத்தில் பெருமாள் வாத்தியார் யார்? அவரின் பின்னணி என்ன? அவர் எதற்காக கைது செய்யப்பட்டார்? என்பது குறித்த முழு பின்னணியை விவரிக்கும் படமாக இருந்தது. இந்த படத்திலும் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் பாராட்டுகளை குவித்து வந்த நிலையில் படத்தின் இரண்டு பாகமும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடியில் வெளியான பின்னரும் பலரும் ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களையும் பார்த்து ரசித்து வருகின்றனர்.

21 நிமிடங்கள் நீக்கப்பட்ட காட்சிகள் சேர்ப்பு

திரையரங்குகளில் இந்த படம் வெளியான பொழுது 2 மணி நேரம் 46 நிமிடங்கள் மட்டுமே ரன்னிங் டைம் இருந்த நிலையில், தற்போது நீக்கப்பட்ட சில காட்சிகள் சேர்க்கப்பட்டு 3 மணி நேரம் 7 நிமிடங்கள் கொண்ட படமாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்கிற கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். படம் கம்யூனிச சித்தாந்தங்களை அதிகமாக பேசுவதாக விமர்சனங்கள் இருந்த நிலையில், தற்போது நீக்கப்பட்ட காட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகி இருக்கிறது.