இரு தினங்களுக்கு முன்பு நடந்த ஷாருக் கானின் பிறந்தநாள் விழாவில் திடீரென இயக்குநர் வெற்றிமாறனும் கலந்துகொண்ட நிலையில், அட்லியின் இந்திப்பட வாய்ப்பை அவர் தட்டிப் பறித்துவிட்டதாக தமிழ் ஊடகங்களில் வந்துகொண்டிருக்கும் செய்திகளுக்கு பதில் அளித்திருக்கிறார்.

‘பிகில்’படம் பாதி நிலையில் இருந்தபோதே அடுத்து ஷாருக் கானை அட்லி இயக்கப்போவதாகவும், அதற்காகவே அவர் ‘ஸீரோ’படத்துக்கு அடுத்து எந்தப் படத்திலும் கமிட் ஆகாமல் இருக்கிறார் என்று செய்திகள் வந்தன. அச்செய்தியை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் ஓரிரு முறை ஷாருக்கும் அட்லியும் சந்தித்துக்கொள்ளவே செய்தார்கள். அதன் அடுத்த கட்டமாக ஷாருக் கானின் பிறந்தநாளான நவம்பர் 2க்கு முந்தைய நாளில் அட்லி,ஷாருக் படம் உறுதியாகிவிட்டதாகவும் அது ஷாருக் பிறந்தநாளில் அறிவிக்கப்படும் என்றும் படத்தின் பெயர் ‘ஷங்கி’என்றும் ஒரு செய்தி ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்தது.

ஆனால் ஷாருக் பிறந்தநாளில் அப்படி ஒரு செய்தி அறிவிக்கப்படவேயில்லை. போதாக்குறைக்கு அட்லி கலந்துகொண்ட அதே ஷாருக்கின் பிறந்தநாள் விழாவில் அசுரன் இயக்குநர் வெற்றிமாறனும் கலந்துகொண்டதால், அட்லியைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு ஷாருக் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் ரீமேக்கில் நடிக்கப்போகிறார் என்று செய்திகள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. இச்செய்திகள் குறித்து கருத்துத் தெரிவித்த வெற்றிமாறன்,’ அசுரன் படத்தைப் பார்த்து ரசித்த ஷாருக் கான் என்னைத் தன் பிறந்தநாள் விழாவன்று சந்திக்க விரும்பினார். அவரது அழைப்பை ஏற்று மும்பை சென்று அவரது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டுவிட்டு வந்தேன். மற்ற விபரங்கள் குறித்து இப்போதைக்கு வேறு எதுவும் பேச விரும்பவில்லை’என்று சஸ்பென்ஸ் வைக்கிறார்.