வெற்றிமாறன் இயக்கத்தில் நான்காவது முறையாக தனுஷ் நடித்துள்ள ‘அசுரன்’படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் ஆரவாரமாகக் கொண்டாடப்படும் நிலையில், அவர் அடுத்து காமெடியன் பரோட்டா சூரியை வைத்து இயக்கவுள்ளதை மீண்டும் உறுதி செய்திருப்பதோடு அப்படத்தின் கதையையும் மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியான தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியின் ‘அசுரன்’படம் அசுர வெற்றியடைந்துள்ளது. பொதுவாக இப்படிப்பட்ட வெற்றிப்படம் கொடுக்கும் இயக்குநர்கள் அடுத்து அதைவிடப் பெரிய ஹீரோக்கள் சென்று இன்னும் பல மடங்கு பெரிய பட்ஜெட்டில் படமெடுத்து தங்கள் சம்பளத்தையும் கன்னாபின்னாவென்று உயர்த்துவார்கள். ஆனால் எப்போதும் நிதான போக்கைக் கடைப்பிடித்து தரம் என்கிற விசயத்துக்காக எந்த சமரசமும் செய்துகொள்ளாத வெற்றிமாறன் அடுத்து மிக எளிமையான ஒரு படத்தை, அதுவும் காமெடி நடிகர் பரோட்டா சூரியை வைத்து இயக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

அதுகுறித்துப் பேசியுள்ள அவர் "’வடசென்னை 2’வைத்தான் அடுத்து துவங்க ஆசை. ஆனால் அதை ஆரம்பித்தால் அது இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும். அதற்கு முன் ஒரு எளிமையான படத்தை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதாவது கண்டிப்பாக இந்தத் தேதியில் இப்படித்தான் வெளியிட வேண்டும் என்ற அழுத்தமெல்லாம் இல்லாத ஒரு படமாக இருக்க வேண்டும். [அசுரன் படத்தில் அந்த அழுத்தம் இருந்ததாக அவர் தெரிவித்திருந்தார்]

நா.முத்துகுமாரின் பட்டாம்பூச்சி விற்பவன் என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற ஒரு கவிதையை அடிப்படையாகக் கொண்ட கதையைப் படமாக எடுக்கிறேன். இறந்து போன ஒரு தாத்தாவின் இறுதிச் சடங்கு பற்றிய கவிதை அது. இதில் சூரி நாயகனாக நடிக்கிறார். இந்த கதையின் கதாபாத்திரத்துக்கு அவர் மிகவும் பொருத்தமாக இருப்பார். அவரிடம் ஒரு எளிமையும் அப்பாவித்தனமும் இருக்கிறது. அது இந்தக் கதைக்கு உதவும்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். ஷங்கர் போன்ற பிரம்மாண்டங்களைக் கட்டி அழும் இயக்குநர்களுக்கான வெற்றிமாறனின் செய்தி இது.