’அசுரன்’படம் மூன்றாவது வாரத்தைக் கடந்த நிலையிலும் அப்படம் குறித்த சர்ச்சைகளுக்குக் குறைவேயில்லை. வெற்றிமாறனுக்கு உண்மையான சமூக அக்கறையோ, சாதிகள் குறித்த புரிதலோ இல்லை. அது ஒரு கமர்சியல் மோசடி’என்று ஒரு புது கோஷ்டி கிளம்பியிருக்கும் நிலையில், ஆண்ட பரம்பரை சாதியனரைக் கண்டு அஞ்சும் வெற்றிமாறனை இனி நாம் ஆதரிக்கக்கூடாது என்று தனது ட்விட்டர் பதில் புதிய ரூட் பிடித்திருக்கிறார் பிரபல எழுத்தாளர் கொற்றவை.

இது குறித்த அவரது பதிவில்,...#அசுரன் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் அறிவுஜீவிகள் மத்தியில் படத்தின் அரசியல் குறித்து பல்வேறு ‘சித்தாந்த’ரீதியான ஆதரவும் எதிர் விமர்சனமும் விவாதமாகி வருகிறது. இந்நிலையில் தற்போது குறிப்பிட்ட சாதி அமைப்புகள் வெற்றி மாறனைத் தொலைபேசியில் அழைத்து மிரட்டும் ஒலிப்பதிவு இணையத்தில் பரவி வருகிறது.அதை பகிர்வோர் #WeSupportVetriMaaran என்கிற முழக்கங்களை முன் வைக்கின்றனர்.

மிரட்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் உள்ளாகும் எவர்க்கும் ஆதரவு தெரிவிக்க வேண்டியது நம் கடமை. ஆனால் அந்த ஒலிப்பதிவில் வெற்றி மாறனின் குரலில் பதிவாகி இருக்கும் பதில் என்னைக் கோபத்தில் ஆழ்த்துகிறது.வெற்றி மாறன் பெரும் அரசியல் புரிதலுடன், சாதி-வர்க்க ஒடுக்குமுறையின் அவலங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் சிறந்த திரை மொழியில் பதிவு செய்திருப்பதாக நான் உட்ப்ட முற்போக்கு சக்திகள் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் வெற்றி மாறன் குறிப்பிட்ட சாதி தாதாக்களுக்கு அளித்திருக்கும் பதில் ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.

“ஆண்ட பரம்பரை என்று சொல்லி நீங்கள் கேலி செய்யும் வசனம் வருகிறது. அது யாரைக் குறிக்கிறது என்பது தெரியாதா? அது எப்படி நீங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்தி மற்றொரு சமூகத்தை தாழ்த்திப் பேசுவீர்கள். இப்போது யாரும் யாரையும் துன்புறுத்துவதில்லை… எல்லாம் சுமூகமாகவே வாழ்கிறார்கள். நீங்கள் ஏன் பிரிவினையைத் தூண்டுகிறீர்கள்… அதை நீக்குங்கள்… உங்களுக்கு எங்கள் சாதியில் பெரும் ரசிகர்கள் உள்ளனர்..” என்றெல்லாம் பேச்சு இடம்பெறுகிறது. 40 அமைப்புகள் மிரட்டியதாகவும் தெரிகிறது.

இதற்கு வெற்றி மாறனின் பதில், “யாரையும் புன்படுத்தும் எண்ணமில்லை. அது தெரியாமல் வந்துவிட்டது… நாளையே அதை நீக்கிவிடுகிறேன்” என்று மட்டும் மீண்டும் மீண்டும் சொல்கிறாரே தவிர நான் இருக்கும் உண்மையைத் தானே பதிவு செய்தேன் என்றோ ஆதிக்க சாதிகளில் இடைநிலை சாதியினரின் கொடூரக் கொலைகளைப் பட்டியலிட்டோ சம்பந்தப்பட்டவர்களிடம் வெற்றி எந்த எதிர் வாதமும் செய்யவில்லை. எல்லாவற்றுக்கும் அப்பால் “நான் எதை உண்மை என்று நம்புகிறேனோ அதை பதிவு செய்திருக்கிறேன். என்னால் நீக்க முடியாது… உன்னால் ஆனதைப் பார்: என்று ஆளுமை நிறைந்த மனிதனாகப் பேசாமல், மிரட்டலுக்குப் பம்மி, வசனத்தை நீக்குகிறேன் என்று சொல்பவருக்கு நாம் எதற்காக ஆதரவாக நிற்க வேண்டும்?

நம் தோழர்களின் இந்த தர்க்க நியாயமற்ற ஆதரவுவாதத்தை என்னால் விளங்கி கொள்ளவே முடியவில்லை.இப்போது எனக்கு எழும் கேள்வி என்னவெனில், வெற்றி மாறன் அசுரனை முழுமையான அரசியல் புரிதலோடும், சமூக அக்கறையிலிருந்தும் படம் எடுத்தாரா அல்லது தனுஷுக்கும் தனக்கும் ஒரு பிம்ப மேலாக்கமும், வணிக வெற்றியும் தேவை என்பதற்காக இவற்றை ஒரு பண்டமாகப் பயன்படுத்திக் கொண்டாரா? கதாநாயகத் தன்மைக்கும், வணிக வெற்றிக்கும் ஒரு புதிய வண்ணம் தேவை என்பதற்காக மட்டுமே அவருக்கு மக்களின் இரத்தம் சிந்தும் போராட்ட வரலாறும், சமூக அவலங்களும் தேவைப்பட்டதா?

படம் வெளியாகி சில நாட்கள் கழித்தே நான் அசுரன் பார்த்தேன், ஆண்ட பரம்பரை வசனம் நீக்கப்படாமல் தான் இருந்தது. அது தற்போது நீக்கப்பட்டுவிட்டதா?அப்படி அவர் மிரட்டலுக்குப் பயந்து நீக்கியிருந்தாலும் கூட விட்டுவிடுவோம். ஆனால் “தெரியாமல் இடம் பெற்று இருக்கிறது… யாரையும் புன்படுத்தும் எண்ணம் இல்லை” என்கிறாரே, இதற்கு என்ன பொருள்? சொல்லுங்கள் தோழர்களே, இது உண்மையெனில் நாம் ஏன் வெற்றி மாறனுக்கு ஆதரவாக தோள் கொடுக்க வேண்டும்? கொண்ட கொள்கைக்காக உயிர் தியாகம் செய்த எண்ணற்ற தோழர்களைப் பற்றிய பாடம் தான் வெற்றி மாறனுக்குத் தேவைப்படும்.

Until I know what is VetriMaaran’s True Political Stand I will say #NoSupport_for_VetriMaaran. If he is apolitical then it is not worth it.