நடிகர் தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் வசூலையும் அள்ளிக்குவித்து வருகிறது. பலதரப்பட்ட ரசிகர்களையும் இந்தப் படம் கவர்ந்திருத்லும் அதில் வரும் ஆண்ட பரம்பரை என்ற வசனத்தை நீக்க வேண்டும் என முக்குலத்தோர் சங்கம் இயக்குநர் வெற்றிமாறனுக்கு கோரிக்கை வைத்தது.

இதை ஏற்றுக்கொண்ட வெற்றிமாறன் அந்த வசனத்தை படத்திலிருந்து நீக்கினார். இதையடுத்து போராட்டம் அறிவித்த முக்குலத்தோர் சங்கம் அதனை திரும்பப் பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் அசுரன் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள், மாணவர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் அமைந்துள்ளதால், அசுரன் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில பாரத இந்து மகா சபாவின் மாவட்ட பொதுச் செயலாளர் எம்.ராஜவேல், கரூர் மாவட்ட காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் அசுரன்' திரைப்படத்தில், ஒரு பள்ளி மாணவர் நாட்டு வெடிகுண்டு வீசுவதுபோல காட்சி இடம் பெற்றுள்ளது. இது அரசுக்கு எதிராக பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட வழிவகுக்கும். தமிழகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக, பழைய ஜாதிய நிகழ்வுகளை வன்முறை கலந்து படமாக்கி இருப்பதைக் கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் மாவோயிஸ்ட்களுடன் இயக்குநர் வெற்றிமாறன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படுகிறோம் எனவும் இந்து சபா அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.