கமலுடன் பஞ்ச தந்திரம் படத்தில் நடித்த பிரபல நடிகர் காலமானார் - திரையுலகினர் அதிர்ச்சி
தெலுங்கில் வில்லன், குணச்சித்திர வேடங்கள் என 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகர் கைகலா சத்தியநாராயணா காலமானார்.
பழம்பெரும் தெலுங்கு நடிகர் கைகலா சத்தியநாராயணா காலமானார். நீண்ட நாட்களாக வயோதிக நோயால் அவதிப்பட்டு வந்த அவர், அதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், சமீபத்தில் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். இந்நிலையில், இன்று காலை அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 87.
இவர் கடந்த 1935ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி, பிரிட்டிஷ் இந்தியாவின் கிருஷ்ணா மாவட்டத்தின் கவுதாரத்தில் பிறந்தவர் ஆவார். நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவர் வில்லன், குணச்சித்திர வேடங்களிலும், பல புராண மற்றும் நாட்டுப்புற படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். இவர் இதுவரை 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... வணங்கானை தொடர்ந்து வாடிவாசலில் இருந்தும் வெளியேறுகிறாரா சூர்யா..? தீயாய் பரவும் தகவல் - பின்னணி என்ன?
இவர் கடந்த 1960-ம் ஆண்டு நாகேஸ்வரம்மா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் என மொத்தம் நான்கு பிள்ளைகள் உள்ளனர். பழம்பெரும் நடிகர் என்.டி.ராமராவுடன் மிகவும் நெருக்கமாக இருந்த இவர், அரசியலிலும் ஈடுபட்டார். தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மச்சிலிப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு மக்களவை எம்.பி.யாக வெற்றி பெற்றார்.
1970கள் மற்றும் 1980களில் தெலுங்கு படங்களில் மிகவும் டெரரான வில்லன்களில் ஒருவராகவும் திகழ்ந்து வந்துள்ளார் கைகலா சத்தியநாராயணா. இவரது மறைவு தெலுங்கு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. கைகலா சத்தியநாராயணா மறைவுக்கு டோலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் தமிழில் கமல்ஹாசன் உடன் பஞ்ச தந்திரம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... கோலிவுட்டில் இது புதுசு... முதன்முறையாக ரஜினிகாந்த் படத்துக்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா..?