Super Star Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த இன்று உலக புகழ்பெற்ற நடிகராக இருக்க முதல் காரணம், அவரை திறன்பட இயக்கிய இயக்குனர்கள் என்றால் அது மிகையல்ல.
கடந்த 1975 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "அபூர்வ ராகங்கள்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகத்தில் கால் பதித்த நடிகர் தான் சிவாஜி ராவ் கேக்வாட் என்ற இயற்பெயர் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருடைய திரை வாழ்க்கையின் வளர்ச்சியில், இயக்குனர் பாலச்சந்தர், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பல முக்கிய இயக்குனர்களின் பங்கு அதிகம் உள்ளது
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 23 திரைப்படங்களை இயக்கி அதில் 18க்கும் மேற்பட்ட திரைப்படங்களை சூப்பர் ஹிட் திரைப்படங்களாக மாற்றிய இயக்குனர் தான் எஸ்.பி முத்துராமன் அவர்கள். 1972 ஆம் ஆண்டு வெளியான "கனிமுத்து பாப்பா" என்கின்ற படத்தின் மூலம் இவர் இயக்குனராக தமிழ் திரை உலகில் களம் இறங்கினார்.
இந்த சூழலில் கடந்த 1977 ஆம் ஆண்டு வெளியான "ஆடு புலி ஆட்டம்" என்கின்ற திரைப்படம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து எஸ்பி முத்துராமன் இயக்கிய முதல் திரைப்படம். அன்று தொடங்கி பிரியா, ஆறிலிருந்து அறுபது வரை, முரட்டுக்காளை, கழுகு, நெற்றிக்கண், ராணுவ வீரன், போக்கிரி ராஜா, பாயும் புலி, நான் மகான் அல்ல மற்றும் நல்லவனுக்கு நல்லவன் என்று பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அவர் கொடுத்துள்ளார்.

இறுதியாக கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் திரைப்படமான "பாண்டியன்" என்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டதும் எஸ்பி முத்துராமன் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டியன் அவருடைய 70-வது திரைப்படம் ஆகும். அதன் பிறகு 1995ஆம் ஆண்டு பிரபல நடிகர் ராம்கி நடிப்பில் வெளியான "தொட்டில் குழந்தை" என்கின்ற திரைப்படத்தை இயக்கியதோடு திரை உலகில் இயக்குனராக தனது பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் எஸ்.பி முத்துராமன்.
