நேற்று வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட டாபிக் இயக்குநர் ராஜூ முருகனின் ‘ஜிப்ஸி’பட ‘வெரி வெரி பேட்’ பாடல். இந்த புரமோஷன் பாடலை இயக்கியிருப்பவர் ராஜுமுருகன் அல்ல. பிரபல வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளரும், சமூக செயல்பாட்டாளருமான ராஜவேல் நாகராஜன். இப்பாடலை இயக்கிய அனுபவம் குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள சுவாரசியமான தகவல்கள் இதோ...

Very very bad சிங்கிள் பாடலின் மேக்கிங் வீடியோவுக்காக நிறைய வாழ்த்துகள் இன்பாக்சை நிரப்புகிறது. அனைவருக்கும் நன்றி!ஜிப்ஸி படத்தின் முதல் பாடலாக இதை வெளியிட முடிவெடுத்த ராஜூமுருகன் அண்ணன் அதை என்னிடம் பகிர்ந்தார். இதை வெறும் ஆடியோவாக ரிலீஸ் பண்ணுவதில் / ரெகுலர் ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் பாடலாசிரியர் பாடகர் இசையமைப்பாளர் தோன்றும் மேக்கிங் வீடியோவில் அவருக்கு உடன்பாடில்லை. எனக்கும் கூட.அப்போதுதான் இந்த பாடல் காக்கிகளின் அடக்குமுறை பற்றி பேசுவதால், பாடல் பதிவில் இருக்கும் சந்தோஷ் நாராயணனை போலிஸ் அரெஸ்ட் செய்கிறார்கள், மற்றொரு கம்போசிங்கில் இருந்து யுகபாரதி அண்ணனையும், ஏதோ ஒரு மேடையில் பேசிக்கொண்டிருக்கும் ராஜூமுருகனையும் போலிஸ் கைது செய்து குண்டுக்கட்டாக தூக்குகிறது. ஜெயிலுக்குள் உள்ளே தள்ளினால் ஏற்கனவே அங்கே நாயகன் ஜீவா இருக்கிறார். சக கைதிகளாக இருப்பவர்கள் ஏன் உங்களையெல்லாம் ஏன் கைது செய்தார்கள் என கேட்கும் கேள்விக்கு விடையாக இந்த பாடலை அங்கே பாடுகிறார்கள் என ஒரு அவுட்லைன் ஐடியா பகிர்ந்தேன். அண்ணனுக்கு இந்த ஐடியா மிகவும் பிடித்தது. உடனே ஓகே சொல்லிவிட்டார்.

அடுத்த கட்டமாக உள்ளே இருக்கும் கைதிகளாக உண்மையாகவே போலிஸ் அடக்குமுறைக்கு உள்ளான போராளிகளை அழைக்கலாம் என முடிவெடுத்து யாரையெல்லாம் அழைப்பது என நீண்ட விவாதம் செய்து இறுதியாக நீங்கள் பாடலில் பார்க்கும் தோழர்களை அழைத்தோம். ஆனால் அண்ணன் எனக்கு ஒரு சர்ப்ரைஸ் வைத்திருந்தார். ஆம் நல்லக்கண்ணு ஐயாவை வீடியோவில் கொண்டு வந்தது, ராஜூமுருகன் அண்ணனால் மட்டுமே சாத்தியமானது. ஷூட்டிங்குக்கு முதல் நாள் மதியம் தான் நல்லக்கண்ணு ஐயா வருகிறார் என்றார். அவரை சரியாக காட்சிப்படுத்த வேண்டுமே என பதட்டம் கூடியது.

ஜெயில் செட் எங்கெல்லாம் இருக்கிறது என தேடியபோது, வடசென்னை படத்தின் கலை இயக்குனர் ஜாக்சன் "கோகுலம் ஸ்டுடியோஸ் ஜெயில் செட் பாருங்க, உங்க கான்செப்டுக்கு / பட்ஜெட்டுக்கு சரியா வரும்" என்றார்.

அபிநயா கார்திக் டான்ஸ் மாஸ்டர்கள் & ஜிப்ஸி படத்தின் உதவி இயக்குனர்ரகள் டீம் உடன் இருக்க, கேமராமேன் செல்வகுமார் & டீம் பம்பரமாய் சுழல, காம்ரேட் டாக்கீஸ் டீம் துணை நிற்க மதியம் 12 மணிக்கு முதல் ஷாட் படமாக்கினேன். முதல் ஆளாக 10 மணிக்கு ஸ்பாட்டுக்கு வந்தவர் சந்தோஷ் நாராயணன். ஒரு வழியாக இரவு 7 மணிக்கு ஷூட்டிங் முடித்தோம். இதை ஏன் இவ்வளவு விரிவாக எழுதுகிறேன் என்றால், காரணம் இருக்கிறது.!

இந்த மேக்கிங் வீடியோவுக்கான அங்கீகாரம் எனக்கும் இன்று நிறையவே கிடைக்கிறது என்றால் அதற்கு காரணம் ராஜூமுருகன் அண்ணன் தான். அவர் நினைத்திருந்தால் நான் சொன்ன ஐடியாவை கேட்டுவிட்டு சூப்பர்டா தம்பி என சொல்லிவிட்டு அவரே ஷூட் பண்ணிவிட்டு எனக்கு பெயர் போடாமல் கூட போயிருக்கலாம். அவர் அப்படி செய்ய மாட்டார் என்பது வேற விஷயம். எனக்கும் அது பெரிதாக தோன்றியிருக்காது. காரணம் முதலில் அவர் என் அண்ணன். இரண்டாவது ஒரு சின்ன ஐடியா சொன்னோம் அவ்ளோதானே, நாம நெனச்சது விஷூவலா மாறிடுச்சு.. அதே போதும்னு திருப்தியடைஞ்சிருப்பேன். ஆனா என்னோட சின்ன ஐடியாவை மதிச்சு, எனக்கு எல்லா சுதந்திரமும் கொடுத்து, எந்த தலையீடும் இல்லாம நான் விரும்பும்படி ஷூட் பண்ண முழு யூனிட்டையும் கொடுத்து, எடிட், DI, Sound mixing-னு எல்லாத்தையும் நீயே பாரு, உனக்கு எப்படி வேணுமோ வாங்கிக்கோடா, உனக்கு ஓகேனா எனக்கு ஓகேடா என எதிலும் அவர் கருத்தை திணிக்காம என்னை இயங்க விட்டு இன்னைக்கு இயக்கம் ராஜவேல் நாகராஜன்னு டைட்டில் கிரெடிட் வரைக்கும் கொடுத்தற்கு எல்லாம் முழுக்க முழுக்க ராஜூமுருகன் அண்ணனின் "தோழர்" மனசு மட்டுமே காரணம்!

மார்கஸ், பெரியார், அம்பேத்கர் புகைப்படங்களோடு தேசியத்தலைவர் மேதகு.பிரபாகரன் படமும் வைக்கவேண்டும் என எண்ணினேன். கண்டிப்பா பிராபகாரன் போட்டோவை மிஸ் பண்ணிடக்கூடாதுடா என நான் நினைத்ததை அவர் சொன்னார். இப்படி பாட்டில் வரும் ப்ராப்பர்ட்டீஸ், அனைவருக்கும் கருப்பு நிற காஸ்டியும், சே படம் ஒட்டப்பட்ட ஜெயில், வாய்கட்டப்பட்ட நீதி தேவதை, சிறைக்குள் நடப்பதை செல்போனில் படம் பிடிக்கும் கேரக்டரின் துண்டு மற்றும் வேட்டியின் பார்டர் கலர், கடைசியாக Anti-Indiansக்கான சமர்ப்பணம் வரை ஒவ்வொன்றையும் பரஸ்பர புரிதலினாலான குறியீடாகவே வைத்திருக்கிறோம்.

தோழர்களே... இது ஏதோ அவருக்கு ஜால்ரா தட்ட எழுதுன பதிவில்ல.

நாம உழைச்ச உழைப்புக்கு கிடைக்குற அங்கீகாரம் தான் எந்தவொரு படைப்பாளிக்கும் முக்கியம், பணமெல்லாம் என்னை பொறுத்தமட்டுல இரண்டாம்பட்சம் தான். இங்க மத்தவங்க உழைப்ப அங்கீகரிக்க, தட்டிக்கொடுக்க, அவங்களுக்கான பெயரை சரியான இடத்துல கொடுக்க நிறைய பேருக்கு மனசில்ல. இன்னமும் இங்க மாற வேண்டியது நிறைய இருக்கு. நான் சொல்றது என்னனு இங்க இருக்க நிறைய உதவி இயக்குனர்களுக்கும், கதை விவாதம், வசனம் மெருகேற்றம்னு வேலை பார்த்தும் எந்த அங்கீகாரமும் கிடைக்காதவங்களுக்கும் புரியும்.

உழைப்பவனின் வியர்வை காயும் முன் ஊதியம் தந்துவிடு என்பார்கள் பொதுவாக. சினிமாவைப் பொறுத்தமட்டில் உழைப்பவனின் வியர்வை காயும் முன்னே டைட்டில் கார்டில் உரிய அங்கீகாரம் தந்துவிடு என வைத்துக்கொள்ளலாம். அங்கீகாரமும், வருமானமும் ஒருங்கே கிடைப்பதே எந்த உழைப்புக்குமான தக்க மரியாதையாக இருக்கும்.

அப்படி இந்த Very Very Bad single making videoக்காக.....உரிய அங்கீகாரமும், அதற்கு மேல் பெரிய ஊதியமும் எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அண்ணன் ராஜூமுருகனுக்கு நன்றி.

குறிப்பு: சந்தோஷ்நாராயணன் இன்ட்ரோ "சிவாஜி" ரஜினி இன்ட்ரோ இன்ஸ்பிரேஷன்.
நல்லகண்ணு ஐயாவை போலிஸ் பிடிக்கப்போய் விலகுவது "ஆரம்பம்" அஜித் அரெஸ்ட் ஆகும் காட்சியின் இன்ஸ்பிரேஷன்.