பாக்ஸ் ஆஃபிசில் வசூல் வேட்டை நடத்தி வரும் 'ஹவுஸ் ஃபுல்-4' படம், இதுவரை ரூ.200 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான அக்ஷய் குமாரின் மிஸன் மங்கள் படமும் ரூ.200 கோடி வசூல் செய்திருந்தது. 

இதன்மூலம், ஒரே ஆண்டில் அடுத்தடுத்து ரூ.200 கோடி வசூல் செய்த படங்களை கொடுத்த ஒரே நடிகர் என்ற சாதனையை அக்ஷய் குமார் படைத்துள்ளார்.
இந்தப் படத்தை தொடர்ந்து, 'காஞ்சனா' படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'லட்சுமி பாம்' படத்தில் அக்ஷய் குமார் நடித்து வருகிறார். ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம், அடுத்த வருடம் ஜுன் மாதம் 5ம் தேதி திரைக்குவரவுள்ளது.


இதனிடையே, தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தல அஜித்தின் 'வீரம்' பட ஹிந்தி ரீமேக்கிலும் அக்ஷய் குமார் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு 'பச்சான் பாண்டே' என  தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.. ஃபர்கத் சம்ஜி இயக்கும் இந்தப் படத்தில், அஜித் நடித்த கேரக்டரில் அக்ஷய் குமார் நடிக்கிறார். 

அவருக்கு ஜோடியாகக் கீர்த்தி சனோன் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'ஹவுஸ் ஃபுல்-4' படத்தை தொடர்ந்து, அக்ஷய்குமாருடன் அவர் ஜோடி சேரும் 2-வது படம் இது. வரும் 2020ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு 'பச்சான் பாண்டே' படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 


முன்னதாக அக்ஷய் குமார் கருப்பு லுங்கியில், கழுத்தில் தங்கச் சங்கிலி அணிந்திருந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி செம வைரலானது. ஏற்கனவே 'வீரம்' படம் தெலுங்கில் 'கட்டமராயுடு' என்ற பெயரில் ரீமேகானது. பவன் கல்யாண் நடித்திருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தமிழ், தெலுங்குவை தொடர்ந்து, தற்போது இந்தியில் ரீமேக்காகும் இந்தப் படம், பாலிவுட்டிலும் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.