Venkatesh Sankar musical concert 'RRR : துபாயைத் தொடர்ந்து சென்னையில் புதிய முயற்சியாக முன்னணி திரைப்பட பாடகர்களுடன் இணைந்து சாஃப்ட்வேர் நிபுணர் வெங்கடேஷ் சங்கர் நடத்தும் இசை நிகழ்ச்சி RRR (ரீல் ரியல் ராகா) வரும் 16ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

Venkatesh Sankar musical concert 'RRR : 'தங்க மீன்கள்' படத்தில் நடித்து சிறு வயதிலேயே பாராட்டுகளை வென்ற சாதனாவின் தந்தை வெங்கடேஷ் சங்கர் நடத்தும் இசை நிகழ்ச்சி வரும் 16ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி திரைப்பட பாடல்களின் மூலம் ராகங்களை ரசிகர்களுக்கு எட்டச் செய்யும் புதிய முயற்சியாக வெங்கடேஷ் சங்கர் நடத்தும் இசை நிகழ்ச்சி RRR (ரீல் ரியல் ராகா) வரும் 16ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

இதற்காக பிரத்யேகமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரப்படுகிறது. இதற்கு முன்னதாக துபாயில் RRR (ரீல் ரியல் ராகா) என்ற இசை நிகழ்ச்சியை நடத்தினார். அதில், பாரம்பரிய இசையின் ராகங்களையும் திரைப்படபாடல்களில் பயன்படுத்தப்படும் விதத்தையும் சுவாரஸ்யம் குறையாமல் தனது இசை நிகழ்ச்சியின் மூலமாக வெளிக்காட்டினார். துபாயைத் தொடர்ந்து சென்னை நடைபெறும் இசை நிகழ்ச்சிக்காக அவர் அதிநவீன டிஜிட்டல் தளமான தி சென்டர்ஸ்டேஜுடன் இணைந்துள்ளார்.

இது குறித்து சென்டர்ஸ்டேஜ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திருமதி அன்ஷு கபூர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 16ம் தேதி மாலை 6:00 மணி முதல் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆர் ஆர் சபா மெயின் ஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். அழைப்பிதழ் உடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். வாவ் கார்த்திக், கண்ணன் எஸ்.கே., கோகுல் பிரசாத், அசோக் ராமமூர்த்தி, வெங்கடேஷ், திஷா பிரகாஷ், மது ஐயர், பாலக்காடு ஸ்ரீராம், சத்யபிரகாஷ், சங்கர் கணேஷ் என்கிற பாலாஜி உள்ளிட்ட பாடகர்களும் பிரம்மாண்ட 12 பீஸ் இசைக்குழுவும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி திரைப்பட பாடல்கள் அவற்றின் ராக விளக்கங்களுடன் இசைக்கப்படும்.

சென்னையில் ஆகஸ்ட் 16 அன்று நடைபெறும் நிகழ்ச்சிக்கு முதியோர் இல்லங்களை சேர்ந்த சுமார் 200 பேர் உணவு உபசரிப்புடன் அழைத்து வரப்படுவார்கள் என்று கூறிய வெங்கடேஷ் சங்கர், சென்னையை தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளில் RRR (ரீல் ரியல் ராகா) நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு இசை ரசிகர்கள் அனைவரும் வருகை தர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.