’ஜெய் பீம்’என்று சொல்லாமலே தலித்துகளின் உண்மையான வலியை ‘அசுரன்’படத்தில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன் என்று தனது முகநூல் பக்கத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்தை வம்புக்கு இழுத்திருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகளின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு.

சற்றுமுன்னர் இயக்குநர் வெற்றிமாறனை சந்தித்து விசிகவின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்து அவருக்கு புத்தர் சிலை ஒன்றை பரிசாகக்கொடுத்த வன்னி அரசு தனது முகநூல் பக்கத்தில்,...“காடு வச்சிருந்தா பறிச்சுக்குவான் காசு வச்சிருந்தா பறிச்சுக்குவான் ஆனா படிப்ப மட்டும் பறிக்க முடியாது. அதனால படிக்கனும். படிச்சு நீ அதிகாரத்துக்கு வரனும்”- அசுரன் படத்தில் தந்தை மகனுக்கு சொல்லும் அறிவுரை

“எல்லா பூட்டுகளுக்கும் ஒரே சாவி அதிகாரம் தான். நாம் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்” என்னும் புரட்சியாளர் அம்பேத்கரின் கோட்பாட்டை ‘அசுரன்’ திரைப்படத்தில் இறுதியாக வைத்திருக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன்.

சாதிய- வர்க்க அடக்குமுறைகளுக்கு எதிராக இவ்வளவு துணிச்சலாக இதுவரை தலித்துகளின் பக்கம் நின்று யாரும் படம் எடுக்கவில்லை. அப்படி எடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை அப்படியே காட்சிபடுத்தியிருக்கிறார் இயக்குனர். பஞ்சமி நிலங்கள் குறித்து துணிச்சலாக பேசியிருக்கிறான் அசுரன். “திருப்பி அடிச்சா தான் நம்ம வலிமை அவனுகளுக்கு புரியும்” என்று ஆதிக்க சாதியினருக்கு எதிராக அசுரன் வேட்டையாடியிருக்கிறான்.

“செருப்பு போட்டு ஊர்த்தெருவுக்கு போனா தலையில் தூக்க வச்சு அடிப்பானுங்களோ....” அந்த ஆதிக்கத்துக்கு எதிராக பிள்ளைங்களை செருப்பு போட வச்சு ஊர்த்தெருவுக்கு போகும் அந்த ஒரு காட்சி போதும். ஆதிக்க சாதியினரை அதே செருப்பால் அடிக்கும் அந்த ஒற்றை காட்சி தலித்துகளின் கோப மொழியை பிரதிபலித்திருக்கிறது.

“மானத்துக்காகத்தான் கொல பண்றோம்னு ஒத்துக்க மாட்டானுங்களே, நகையை பறிக்கப்போனோம். பொம்பளய இழுக்கப்போனோம்னு தான்
கேஸ் போடுவானுங்க” தலித்துகளின் வாழ்நிலையை அறநிலையை மிக அழகாக திரைப்படமாக எடுத்திருக்கும் இயக்குனர் வெற்றி மாறனுக்கு
வாழ்த்துகள்... ( குறிப்பு:இவர் ஜெய்பீம்னு சொல்லாமலே தலித்துகளின் வலியை கோபத்தை திரைப்படமாக எடுத்திருக்கிறர்)

ஒரு எளிய தலித்தாகவே வாழ்ந்திருக்கிறார் நடிகர் தனுஷ் அவருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் வாழ்த்துகள்...தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...குறிப்பு: இயக்குநர் வெற்றி மாறன் அவர்களை இன்று நேரில் சந்தித்து விடுதலைச்சிறுத்தைகள் சார்பில்
புத்தர் சிலை கொடுத்து வாழ்த்தினோம் என்று பதிவிட்டிருக்கிறார்.