valimai postponed : படம் துவங்கியதில் இருந்தே கொரோனாவால் சிக்கலை சந்தித்து வருகிறது வலிமை.. படப்பிடிப்பு தாமதமான நிலையில் தற்போது வெளியிட்டிற்கே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

அஜித் நடிப்பில் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி உள்ளது வலிமை. இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை போன்ற ஹிட் படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கி உள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், 'நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த படத்தை தயாரித்து உள்ளார். தமிழிலும் இவர் தயாரிக்கும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், அடுத்தடுத்து சில தமிழ் படங்களையும் போனி கபூர் தற்போது தயாரித்து வருகிறார்.

வலிமையில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அஜித்தின் தாயாக ஜெயசுதா நடித்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் 2020 -ன் துவக்கத்தில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக துவக்க தயாரிப்பிலேயே பிரச்சனையை சந்தித்தது. பின்னர் ஊரடங்கு தளர்வின் போது சென்னை, ஹைதராபாத், ரஷ்யா என படப்பிடிப்பு நடந்தது. இதையடுத்து கடந்த அந்த படம் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு மீண்டும் அதிகரிக்க துவங்கிய கொரோனா ரிலீஸுக்கு முட்டுக்கட்டை போட்டது. 

பின்னர் இரண்டு ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது வலிமை. இப்படம் வருகிற 2022-ம் ஆண்டு பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் வெளியிடப்படும் என போனி கபூர் அறிவித்திருந்தார்.

இதற்கிடையே இந்த மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட ஆர் ஆர் ஆர், ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்தன. இருந்தும் வலிமை படம் கண்டிப்பாக ரிலீஸ் அக்காவும் என தயாரிப்பு நிறுவனம் நேற்று வரை உறுதியளித்து வந்தது.

இந்நிலையில் சமீபகாலமாக அதிகரிக்க துவங்கிய ஓமிக்ரான் தொற்று காரணமாக நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு போடப்படும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக வலிமையும் ஒத்தி வைக்கப்படுவதாக இன்று மாலை வலிமை படக்குழு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த செய்து இரண்டு வருடங்களாக வலிமைக்காக காத்திருந்த அஜித் ரசிகர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது.