'நேரம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் மலையாள நடிகை நஸ்ரியா நஸீம். முதல் படத்திலேயே ரசிகர்களை வசீகரித்த அவர், 'ராஜா ராணி' படத்தின் மூலம் இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்த ராட்சஷியானார். 

ஆனால் அவரையே ஒரு அழகான ராட்சஷன் கிறங்கடித்திருக்கிறார். அவர் வேறுயாருமல்ல நம்ப தல அஜித்தான். சிறுவயது முதலே அஜித்தின் தீவிர ரசிகையான நஸ்ரியா, தலயுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என கூறி வந்தார்.


 
ஆனால், திடீரென மலையாள நடிகர் பஹத் பாஸிலை திருமணம் செய்து கொண்டு திரையுலகிலிருந்து விலகினர். ஆடிய காலும், பாடிய வாயும் ஓயாது என்பது போல் மலையாள படத்தின் மூலம் மீண்டும் ரீ-எண்ட்ரீ கொடுத்த நஸ்ரியாவுக்கு ஒரு படத்திலாவது அஜித்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் நிறைவேறாமலேயே உள்ளது. 

அதற்கேற்றாற்போல் அஜித்தின் ஒவ்வொரு படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் போதும், அந்தப் படத்தில் நஸ்ரியாதான் ஹீரோயினாக நடிக்கிறார் என்பது போன்ற செய்திகளும் வெளிவந்து கொண்டே இருந்தன. இது, வலிமை படம் வரை தொடந்து கொண்டே இருப்பதுதான் ஆச்சரியம். 

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும்  'வலிமை' படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக, படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயினை தேடும் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

இந்த நிலையில் நடிகை நஸ்ரியா பதிவு செய்த ஒரு டுவிட்டிலிருந்து அவர்தான் 'வலிமை' படத்தின் நாயகியாக நடிக்க இருப்பதாக செய்திகள் பரவின. ஆனால் இந்த செய்திகளை நஸ்ரியா மறுத்துள்ளார். 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள அவர், 'வலிமை' படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளில் உண்மை இல்லை என்றும், இன்னும் எதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்றும் எனவே தற்போதைய நிலையில் இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் .

ஆனால் அதே நேரத்தில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் படக்குழுவினர்களிடம் இருந்து வரும் என்றும் நஸ்ரியா தெரிவித்துள்ளார்.  இதனால், ஒருசில நாட்களில் நஸ்ரியா இந்த படத்தில் நடிப்பாரா? அல்லது கடந்த செய்திகளைப் போன்று இதுவும் கிசுகிசுவாகவே மாறிப்போகுமா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்...