பாடகி சின்மயி விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள்தான் பதில் கூற வேண்டும் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

பாடகி சின்மயி கடந்த சில தினங்களாக பிரபலங்கள் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்களைக் கொடுத்து வருகிறார். #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள், குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. இவர்களில் வைரமுத்து, ராதாரவி, நடன இயக்குநர் கல்யாண் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. 

சின்மயி-ன் குற்றச்சாட்டுக்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து பாடகி சின்மயிக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல் ஹாசன், குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். சேலத்தில் நடைபெறும் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக கமல் ஹாசன், சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை அவரிடம் எழுப்பினர். 

அதற்கு அவர் பேசியது: பாடகி சின்மயி விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தான் பதில் கூற வேண்டும். கோயிலில் உள்ளவர்களின் துணை இல்லாமல் சிலைகள் திருட்டு போய் இருக்க வாய்ப்பு இல்லை.  சிலைகளை மீட்க நாங்கள் உதவி செய்கிறோம் என்றபோது வேண்டாம் என்றார்கள். மழைக்காக இடைத்தேர்தலை தள்ளி போட வேண்டுமா? என்றும் கமல் ஹாசன் அப்போது கேள்வி எழுப்பினார்.