திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கவிஞர் வைரமுத்து அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாடகி சின்மயி தொடங்கி சுமார் 11 பேர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த புகார் தொடர்பாக வைரமுத்து மறுப்பு தெரிவித்திருந்தார். 

இந்த பிரச்சனைகளுக்கு இடையே கடந்த மாதம்  சென்னையை விட்டு மதுரைக்குச் சென்றாலாவது சிறிது ஆசுவாசமாக இருக்குமே என்று அவரது நெருங்கிய நண்பர் வீட்டுக்குச்சென்று தங்கியிருந்தார். அப்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் வைரமுத்துவுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கிறது என்று கூறி உடனே தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். பிறகு வீடு திரும்பினார். 

இந்நிலையில் நேற்று அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். என்னவிதமான உடல் உபாதை காரணமாக அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்த விபரங்கள் வெளிவரவில்லை.