கூடிய விரைவில், வைகை புயல், காமெடி கிங், மீம்ஸுகளின் மன்னன், என பல பெயருக்கு சொந்தக்காரரான வடிவேலு ஆன்லைன் காமெடி தொடர் ஒன்றில் நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், இவருடைய ரசிகர்களை உச்சாகப்படுத்தியுள்ளது.

காமெடி நடிகர்  வடிவேலு இல்லாதா மீம்ஸுகளே இல்லை என சொல்லும் அளவிற்கு இளைஞர்கள் ஒவ்வொருவரும் வைகை புயலை கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக குழந்தைகள் முதல், பெரியவர்கள் என அணைத்து வயதினரும் ஒவ்வொரு நாளும் இவருடைய காமெடியை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்து வருகிறார்கள்.

ரசிகர்களின் மனம் கவர்ந்த காமெடி நடிகராக வலம் வந்த இவரை, இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி திரைப்படம் கதாநாயகனாக மாற்றியது. முதல் படமே மிகப்பெரிய ஹிட்... முன்னணி ஹீரோக்களின் சம்பளத்திற்கு நிகராக தன்னுடைய சம்பளத்தையும் உயர்த்தி, வளர்ந்து வந்த இவர், அடுத்தடுத்து ஹீரோவாக நடித்த, தெனாலிராமன், எலி போன்ற படங்கள் தோல்வி அடைந்தது. மீண்டும் காமெடி நடிகராக நடிக்க விரும்பாததாலும், குடும்பத்திற்காகவும் சில நாட்கள் திரையுலகை விட்டு விலகியே இருந்தார்.

இதை தொடர்ந்து மீண்டும் இவரை வைத்து இயக்குனர் சிம்பு தேவன் 'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி' என்கிற படத்தை எடுக்க முடிவெடுத்தார். இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிக்க இருந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

படப்பிடிப்பு துவங்கிய சில நாட்கள் மட்டுமே படத்தில் நடித்த வடிவேலு, பின் சரியாக படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என கூறப்பட்டது. பின் தயாரிப்பாளர் ஷங்கர் இது குறித்து, நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். 

இதுகுறித்த பிரச்சனைக்கு நடிகர் வடிவேலு சரிவர ஒத்துழைப்பு தரவில்லை என கூறி, தயாரிப்பாளர் சங்கம், வடிவேலு தமிழ் படங்களில் நடிக்க தடை விதித்தது. எனவே இந்த படத்தை தொடர்ந்து வடிவேலு மற்ற படங்களில் நடிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இவை அனைத்தையும் மீறி, தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'மெர்சல்' படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார் வடிவேலு. இந்த படத்திற்கு பின், தனக்கு பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் கவலை இல்லை, நெட்டபிலிக்ஸ் போன்ற ஆன்லைன் தொடர்களில் தனக்கு அழைப்பு வருவதாக, 'நேசமணி' ஹாஷ்டாக் பிரபலமான போது தெரிவித்தார்.

இந்நிலையில் இவரை வைத்து காமெடி தொடர் எடுக்க பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டதாகவும், கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.