வட சென்னை பட ரிலீஸுக்குப் பின்னர் வந்த கடும் வசவுகளால் அப்படத்தின் இரண்டாவது மூன்றாவது பாகங்களை எடுக்கும் திட்டத்தை இயக்குநர் வெற்றிமாறன் கைவிட இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பெரும்பாலான விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களுடன் ‘வட சென்னை’ படம் பெரும் ஆரவாரமான வெற்றி பெற்றிருந்தாலும் இன்னொரு பக்கம் சில அமைப்புகள் படத்தை கடுமையாக கண்டித்து வருகின்றன. தமிழ்ப் பண்பட்டை குறிப்பாக வடசென்னைவாசிகளின் வாழ்வியலை படம் கொச்சைப்படுத்துவதாக தொடர்ந்து கொந்தளித்துவருகின்றனர். இது குறித்த புகார்கள் கமிஷனர் அலுவலகத்திலும், முதல்வரின் தனிப்பிரிவிலும் கூட குவிந்தன.

 

இந்தப்புகார்களுக்கு மதிப்பளித்து ஒரு சில வார்த்தைகளையும், இரு அரை நிர்வாணக் காட்சிகளையும் நீக்கி நேற்று மறுசென்சார் வாங்கி படத்தை வெளியிட்டார் வெற்றிமாறன். ஆனால் இந்த எதிர்ப்புகள் எதையும் மனதளவில் ரசிக்காத வெற்றிமாறன் மனம் வெறுத்துப்போய், இதே பிரச்சினைகளை தொடர்ந்து சந்திக்கவிரும்பாமல், இப்படத்தின் இரண்டாம், மூன்றாம் பாகங்களை இயக்குவதில்லை என்று முடிவெடுத்துவிட்டாராம்.

 

இந்த பாகங்களில் இணைப்பதற்காக வைத்திருந்த காட்சிகளை எடிட் செய்து ஐந்தரை மணிநேரம் ஓடும்படமாக வடசென்னை மிக விரைவில் ஹாட் ஸ்டார் சேனலில் ஒளிபரப்பப்பட இருக்கிறது. இத்தகவலை வடசென்னை என்ற பெயரில் இயங்குகிற ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறார்கள்.