பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளான இன்று அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'மா வந்தே' என்கிற பான் இந்தியா படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
Narendra Modi biopic Movie Maa Vande : இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. நரேந்திர மோடியாக உன்னி முகுந்தன் நடிக்கும் இந்த பான் இந்தியா திரைப்படத்தை சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் சார்பில் வீர் ரெட்டி எம் தயாரிக்கிறார். படத்திற்கு "மா வந்தே" என்று பெயரிடப்பட்டுள்ளது. நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. கிராந்தி குமார் சி.எச். இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
மோடியின் பயோபிக்கில் உன்னி முகுந்தன்
நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் இடம்பிடித்த நரேந்திர மோடியின் வாழ்க்கை பயணத்தை சித்தரிக்கும் வகையில் இந்த படம் தயாராகி வருவதாக தயாரிப்பு நிறுவனமான சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் தெரிவித்துள்ளது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம், அவரது குழந்தைப் பருவம் முதல் ஒரு தேசியத் தலைவராக அவர் உயர்ந்ததை பார்வையாளர்கள் முன் கொண்டு வரும். அவரது பயணம் முழுவதும் உத்வேகத்தின் ஆதாரமாக விளங்கிய அவரது தாயார் திருமதி ஹீராபென் மோடியுடனான அவரது ஆழமான உறவையும் இப்படம் எடுத்துக்காட்டும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச தரத்தில் அதிநவீன விஎஃப்எக்ஸ் மற்றும் நாட்டின் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் நிபுணத்துவத்துடன் இந்தப் படத்தை உருவாக்குவதாக சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் கூறியுள்ளது. பான் இந்தியா வெளியீட்டுடன், இப்படம் ஆங்கிலத்திலும் தயாரிக்கப்படும். இந்த ஊக்கமளிக்கும் வாழ்க்கை வரலாற்றின் மூலம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத ஒரு சினிமா அனுபவத்தை வழங்குவதே தங்கள் நோக்கம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஒளிப்பதிவு - கே.கே. செந்தில் குமார் ஐ.எஸ்.சி, இசை - ரவி பஸ்ரூர், படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத், தயாரிப்பு வடிவமைப்பாளர் - சாபு சிரில், சண்டைக்காட்சி - கிங் சாலமன், நிர்வாகத் தயாரிப்பாளர்கள் - கங்காதர் என்.எஸ், வாணிஸ்ரீ பி, லைன் புரொடியூசர்ஸ் - டிவிஎன் ராஜேஷ், இணை இயக்குநர் - நரசிம்ம ராவ் எம், மார்க்கெட்டிங் - வால்ஸ் அண்ட் ட்ரெண்ட்ஸ்.
