தமிழ் சினிமாவில் வில்லாதி வில்லனாக வலம் வந்தவர் நம்பியார். அவரைப் பற்றி பலரும் அறிந்திடாத ஆச்சர்ய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Unknown Facts about Nambiar : புருவத்தை உயர்த்தி இவர் தன் முகத்தை அகோரமாக மக்கள் பீதியில் உறைவார்கள். கைகளை பிசைந்து கொண்டு இவர் கரகரத்த குரலில் வசனங்களை உச்சரித்தால், பார்ப்பவர்கள் மிரண்டு போவார்கள். அவர் தான் எம்.என்.நம்பியார். தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கான தனி பாணியை அமைத்துக் கொடுத்தவர். நகைச்சுவை நடிகனாக திரையுலக பயணத்தை தொடங்கி கதாநாயகனாக அவதரித்த நம்பியாரை, தமிழக மக்கள் வில்லனாகவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர்.
எம்ஜிஆரின் ஆஸ்தான வில்லன் நம்பியார்
1960களில் அசோகன், வீரப்பா, மனோகர் போன்ற ஜாம்பவான் வில்லன்கள் இருந்தாலும், தனக்கென்ற தனி பாணியால் திரையில் தோன்றி, மக்களை மிரட்டினார் நம்பியார். தமிழக மக்களால் கடவுள் அந்தஸ்தில் பார்க்கப்பட்ட எம்.ஜி.ஆருக்கு பெரும்பாலான படங்களில் நம்பியாரே வில்லனாக நடித்திருந்தார். குறிப்பாக 75க்கும் மேற்பட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். எம்ஜிஆர் உடன் இவர் நிகழ்த்தும் கத்தி சண்டை காட்சிகள், ஆக்ரோஷமாக இருக்கும்.
எம்ஜிஆரை நம்பியார் தாக்கும் காட்சிகளை கண்டவர்கள், நம்பியாரை தாக்குவதற்காக திரையை கிழித்த கதையெல்லாம் அதிகம் நடந்திருக்கிறது. எம்ஜிஆர் மட்டுமின்றி நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என்று மும்மூர்த்திகளாக திரையில் ஜொலித்த மூவர்களுடன் நம்பியார் வில்லனாக நடித்து புகழ்பெற்றுள்ளார். அத்துடன் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், விஜய் என 7 தலைமுறை நடிகர்களுடன் நம்பியார் நடித்து அசத்தி உள்ளார். 80களின் இறுதிவரை வில்லனாக மட்டுமே நடித்து வந்த நம்பியாரை, தூரல் நின்னு போச்சு படம் மூலம் குணச்சித்திர நடிகராக பரிணமிக்க செய்தார் கே.பாக்கியராஜ்.
நம்பியாரின் ரூட்டை மாற்றிய பாக்கியராஜ்
தூரல் நின்னு போச்சு படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடல்மொழியோடு, நம்பியார் நடித்ததை பார்த்த மக்கள், மிரண்ட விழிகளை மாற்றிக்கொண்டு, அன்போடு கண்டு ரசித்தனர். பல வகையான உடல்மொழியோடு நம்பியார் நடித்து உச்சம் தொட்டது ஒருபுறம் இருந்தாலும் எம்ஜிஆர் முதலமைச்சராக அரியணை ஏற நம்பியாரும் ஒருவகையில் காரணம் என்பதை எம்ஜிஆரே பல இடங்களில் கூறி இருக்கிறார். அரசியலுக்கு வரும்படி எம்ஜிஆர் அழைத்தும் அதை நிராகரித்த நம்பியார், வாழ்நாள் முழுவதும் நடிப்பதையே வாழ்க்கையாக அமைத்துக் கொண்டார் நம்பியார்.
கலைஞர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள். வாழ்வின் கரடுமுரடான பக்கங்களில் இருந்து தான் பெற்ற பாடங்களைக் கொண்டு திரையில் இன்றும் நிழலாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் வில்லன்களின் நாயகன் நம்பியார்.

எம்ஜிஆரின் நண்பன் நம்பியார்
எம்ஜிஆர் மறைவுக்கு பின் நம்பியார், ஒரு மேடையில் தங்களுடைய நினைவுகளை பகிர்ந்துகொண்டபோது எம்ஜிஆர் உடனான நட்பை போற்றும் வகையில் சில வார்த்தைகளை பேசி இருந்தார். எம்ஜிஆரின் மிக நெருங்கிய நண்பனாக திகழ்ந்த நம்பியார், ஒருநாள் விழா மேடையில் தனக்கு எம்ஜிஆர் மேல் ரொம்ப கோபம் என குறிப்பிட்டார். அவர் இருந்தவரை எங்கே போனாலும் எம்ஜிஆர் என்றவுடன் உடனே மக்கள் நம்பியார் என உச்சரிப்பார்கள். இப்போ அவர் போய்விட்டார். மக்கள் என்னை மறந்துவிட்டார்கள். அவர் போகும்போது என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம் என கண்களில் நீர் ததும்ப நம்பியார் பேசி இருந்தார்.
நம்பியார் தமிழ் தவிர ஜங்கிள் என்கிற ஆங்கில படத்திலும், கணவனே கண்கண்ட தெய்வம் படத்தின் இந்தி பதிப்பிலும் நடித்துள்ள நம்பியார், ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தவர். தனது நம்பியார் நாடக மன்றம் மூலம் நாடகங்களை பல முறை அரங்கேற்றி உள்ளார். அதுமட்டுமின்றி திகம்பர சாமியார் எனும் மாபெரும் வெற்றிபெற்ற படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்திருக்கிறார் நம்பியார்.
நிஜ வாழ்வில் ஹீரோவாக திகழ்ந்த நம்பியார்
சினிமாவில் மட்டும் நம்பியார் மக்களை கவரவில்லை, பக்தியிலும் பலரை கவர்ந்துள்ளார். நம்பியார் என்றால் எம்ஜிஆர் என கூறும் மக்கள் மத்தியில், அவர் பெயரை சொன்னால் பலருக்கும் அடுத்ததாக நினைவுக்கு வருவது சபரிமலை ஐயப்பன் தான். ரஜினிகாந்த் உள்பட தமிழ்சினிமா நடிகர்கள் பலருக்கும் நம்பியார் தான் குருசாமி. தொடர்ந்து 65 ஆண்டுகளாக சபரிமலைக்கு சென்று வந்தார் நம்பியார்.
திரையில் வில்லனாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் எந்த தீய பழக்கமும் இல்லாத, கடவுள் பக்திமிக்க நேர்மையான மனிதராகவே வாழ்ந்தார் நம்பியார். கோபம் என்றால் என்னவென்று கூட தெரியாது என்றும் கூறும் அளவுக்கு நம்பியார் ஒரு தெளிவான நன்மதிப்புமிக்க மனிதராகவே வாழ்ந்துள்ளார். பொதுவாக நம்பியார் என்றதும் உருட்டும் விழிகளும், மிரட்டும் குரல் அமைப்பும் தான் ஞாபகத்துக்கு வரும்.
2 மாதங்கள் மட்டும் சிகரெட் பிடிக்கும் பழக்கம் கொண்ட நம்பியார்
ஆனால் நிஜ வாழ்க்கையில் சாதுவானவராகவே வாழ்ந்துள்ளார் நம்பியார். தீய பழக்கங்கள் எதுவும் இல்லாத நம்பியார், வருடத்தில் இரண்டு மாதங்கள் மட்டும் சிகரெட் பிடிப்பதை வழக்கமாக வைத்திருந்தாராம். கவலையில்லாத மனிதராகவே அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய நம்பியார், நிழலில் வில்லனாகவும், நிஜத்தில் நாயகனாகவும் வாழ்ந்தவர் ஆவார்.
நம்பியார் சைவ உணவை மட்டுமே சாப்பிடுவாராம். இப்படி தன் வாழ்நாள் முழுவதும் பல கட்டுப்பாடுகளை கடைபிடித்து வாழ்ந்த நம்பியார், தான் வணங்கும் சபரிமலை ஐயப்பனின் புகழ்பாடும் சில கருத்துக்களை திரைப்படங்கள் மூலமாகவும் தெரிவித்திருக்கிறார். இப்படி நிஜ வாழ்வில் ஒரு ஹீரோவாகவே இருந்து வந்த நம்பியார் தனது 89 வயதில் இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும் அவரின் படங்கள் காலம் கடந்து மக்களால் கொண்டாடப்பட்டு தான் வருகிறது.
