கேன்ஸ் பட விழாவில்... கெத்தாக வேஷ்டி சட்டை அணிந்து வந்து மாஸ் எண்ட்ரி கொடுத்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து கலந்துகொண்டார்.
உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தலைமையில் இந்தியக் குழு கலந்துகொண்டுள்ளது. எல்.முருகன் தலைமையிலான குழுவில் ஆஸ்கர் விருது வென்ற தயாரிப்பாளர் குனீத் மோங்கா, 2017-ம் ஆண்டு உலக அழகி பட்டம் பெற்ற மனுஷி சில்லர், இந்தி நடிகை ஈஷா குப்தா, மணிப்பூரி நடிகர் கங்காபம் டோம்பா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட ஆக்ரா, கென்னடி, நெஹெமிச் மற்றும் இஷானவ் ஆகிய 4 திரைப்படங்கள் தேர்வாகி உள்ளன. கேன்ஸ் திரைப்பட விழாவை கண்டுகளிக்க நடிகை குஷ்பு, சீதா ராமம் பட நடிகை மிருணாள் தாக்கூர் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஆகியோரும் சென்றுள்ளனர். கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பு மிகவும் பிரபலமானது. இதில் விதவிதமான ஆடைகளை அணிந்துவந்து பிரபலங்கள் வலம் வருவர்.
இதையும் படியுங்கள்... முதன்முறையாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வைகைப்புயல் வடிவேலு பாடிய மாமன்னன் பாடல் - ரிலீஸ் தேதி அறிவிப்பு
அந்த வகையில் கேன்ஸ் திரைப்பட விழாவின் முதல் நாளன்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து வந்து சிவப்பு கம்பளத்தில் கெத்தாக கலந்துகொண்டார். அவருடன் ஆஸ்கர் விருது வென்ற எலிபெண்ட் விஸ்பரர்ஸ் குறும்படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்காவும் கலந்துகொண்டார்.
அவர்கள் ரெட் கார்பெட்டில் நடந்து வந்தபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கேன்ஸ் பட விழாவின் போது எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். கேன்ஸ் திரைப்பட விழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும்.
இதையும் படியுங்கள்... கேன்ஸ் பட விழாவில் கிளாமர் குயினாக வந்த தனுஷ் பட நடிகை