Nenjukku Needhi : அனல்பறக்கும் போஸ்டருடன் வந்த மாஸ் அப்டேட்... நெஞ்சுக்கு நீதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Nenjukku Needhi : அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் அரசியலில் இறங்கிய பின்னரும், சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘நெஞ்சுக்கு நீதி’. அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை தயாரித்த போனி கபூர் தான் இப்படத்தையும் தயாரித்துள்ளார்.
இது இந்தியில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். கனா படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் போலீஸாக நடிப்பது இதுவே முதன்முறை.
இதில் நடிகர் உதயநிதிக்கு ஜோடியாக கருப்பன் பட நடிகை தன்யா நடித்துள்ளார். மேலும் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர், மயில்சாமி, சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்துக்கு திபு நினன் தாமஸ் இசையமைத்து உள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு, ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற மே 20-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படமும் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பீஸ்ட் படத்தை தான் திரையிட வேண்டும்... தியேட்டர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறதா? - பின்னணி என்ன?