தமிழ் சினிமாவில் இதுவரை கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், முதல்முறையாக வித்தியாசமான கதையில் நாயகனாக நடித்துள்ள படம் 'சைக்கோ'. 'துப்பறிவாளன்' படத்தின் ஹிட்டை தொடர்ந்து, இயக்குநர் மிஷ்கினின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள இந்தப் படத்தில், பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக உதயநிதி நடித்துள்ளார். 

நித்யா மேனன், அதிதிராவ் ஹைதரி என டபுள் ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இயக்குநர் ராம் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் 'சைக்கோ' படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். 

இந்த படத்திற்கு தன்விர்மிர் ஒளிப்பதிவும், அருண்குமார் படத்தொகுப்பும் செய்துள்ளனர். அங்குலிமாலா பற்றிய புகழ்பெற்ற புத்தமத கதையை தழுவி, 'சைக்கோ' படம் எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, இந்தப் படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகி சமூக வலைதளத்தையே அதிரச் செய்தது. சமீபத்தில், போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, சைக்கோவை ரிலீஸ் செய்ய படக்குழு நாள் பார்த்து வந்தது. இறுதியாக, புத்தாண்டு கொண்டாட்டத்தை குறிவைத்து சைக்கோவை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. 

அதன்படி, வரும் டிசம்பர் 27ம் தேதி 'சைக்கோ' படம் உலகம் முழுவதும் ரிலீஸ் என அறிவித்துள்ள படக்குழு, புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.
இதுவரை உதயநிதி நடித்த படங்கள், நடிகராக அவருக்கு எந்தவொரு பெயரையும் எடுத்து தரவில்லை. இந்த குறையை, கண்பார்வையற்றவராக உதயநிதி நடித்திருக்கும் 'சைக்கோ' படம் நிவர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.