டான் என்றால் அது உதயநிதி தான் என்றும் powerful people make powerful film என கேஜிஎப் பட பாணியில் உதயநிதியை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டினார். 

டான் என்றால் அது உதயநிதி தான் என்றும் powerful people make powerful film என கேஜிஎப் பட பாணியில் உதயநிதியை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டினார். நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார்.

திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் திமுகவின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நெஞ்சுக்கு நீதி. இத் திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியம் தியேட்டரில் நேற்று நடைபெற்றது. படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் ஆர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பலரும் இத்திரைப்படத்தை வாழ்த்தி பேசினர். அப்போது பேசிய அன்புச்செழியன் ஒரு செங்கலை வைத்து ஆட்சியை மாற்றியவர் உதயநிதி ஸ்டாலின், அதனால் இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடையும் என வாழ்த்துகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய ஆர்.ஜே பாலாஜி கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மே-7 ஆம் திமுக பதவியேற்றுக் கொண்டது. அப்போது கொரோனா உச்சகட்டத்தில் இருந்த நேரம், அப்போது ஒரு 28 வயது பையனுக்கு கொரோனா காரணமாக ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது, இதனால் ஆக்சிஜன் படுக்கை தேவைப்பட்டது அப்போது 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதவியால் அந்த பையனுக்கு படுக்கை வசதி கிடைத்தது என்றார். நெஞ்சுக்கு நீதி என்ற இந்த திரைப்படம் இந்திய சினிமாவுக்கு தேவையான ஒரு படம், ஜெய்பீம், பரியேறும் பெருமாள் என பா.ரஞ்சித் படங்கள் வரும்போது இல்லாத சாதியைப்பற்றி திரும்பத்திரும்ப பேசுகிறார்கள் என விமர்சிக்கிறார்கள். இல்லாத ஒரு சாதியை சொல்லி சொல்லி படம் எடுக்கிறார்கள் என விமர்சிக்கிறார்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இன்னும் 445 கிராமங்களில் தீண்டாமை இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் உள்ளது.

கபாலி திரைப்படம் வந்தபோது சில கல்லூரி மாணவர்களிடம் கேட்டேன், அதற்கு அவர்கள் அந்த ஆள் படத்தை நாங்கள் பார்க்க மாட்டோம் என்றனர். அந்த அளவிற்கு சாதி ஊறிப்போய் கிடக்கிறது, படம் எடுத்தது பா.ரஞ்சித் அதனால்தான் அப்படியான ஒரு கருத்து வந்தது. கல்லூரி படிக்கும் மாணவர்கள் மத்தியிலேயே சாதி உணர்வு மேலோங்கியுள்ளது. இது போன்ற மன நிலையை மாற்றுவதற்கு நெஞ்சுக்கு நீதி போன்ற திரைப்படங்கள் அவசியம் வரவேண்டும். இதுபோல இன்னும் அதிகமான திரைப்படங்கள் வரவேண்டும் என்றார்கள்.அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் மேடை ஏறிய உடன் கேஜிஎப் பட பாணியில் டான் என்றால் அது உதயநிதி தான் என்றார். டானுக்கு நிறைய விளக்கங்கள் உள்ளது, கேஜிஎப் பட பாணியில் சொல்ல வேண்டுமென்றால் powerful people make powerful films என்று சொல்லலாம் என்றார்.

இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள், இயக்குனர் அருண் ராஜாவை நண்பர் என்று சொல்வதில் எனக்கு பெருமையாக உள்ளது. எனக்கு அவர் ஒரு நல்ல படம் பண்ண வேண்டும் என்று ஆசையாக உள்ளது. எனக்கு விரைவில் அவர் ஒரு நல்ல கதை சொல்லவேண்டும் என மேடையில் கோரிக்கை வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், எங்களது குடும்பத்தில் யார் வந்தாலும் முதலில் ரெடி ஆவது சிந்து தான் என்றார். சிந்துவின் இழப்பு அருண் ராஜாவுக்கு மிகப்பெரிய இழப்பு, ஆனால் சிந்து உன்னுடன் தான் இருப்பார் என அவர் கூறினார். அப்போது இயக்குனர் அருண் ராஜா கண்கலங்கினார் மேடையிலேயே அவரை கட்டித்தழுவி ஆறுதல் கூறினார் சிவகார்த்திகேயன்.