கொல்கத்தாவில் காரில் சென்று கொண்டிருந்த நடிகையை, பயன்ணத்தின்போது பாதியில் இறங்கச்சொல்லி  வெளியே இழுத்து அநாகரிகமாக நடந்துகொண்ட உபேர் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

பிரபல, வங்கமொழி டிவி நடிகை ஸ்வஸ்திகா தத்தா. இவர் கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் இருந்து படப்பிடிப்பு தளத் துக்குச் செல்ல நேற்று காலை உபேர் காரை புக் செய்திருந்தார். ஜம்ஷத் என்ற டிரைவர் வந்தார். காரில் ஏறினார் ஸ்வஸ்திகா. அதற்குப் பின் நடந்த சம்பவங்களை பேஸ்புக்கில் பதிவாக எழுதியிருக்கிறார் அவர்.

காலை 8.15 மணியளவில் கார் சென்று கொண்டிருந்தது. நடுவழியில், ட்ரிப்பை கேன்சல் செய்துவிட்டேன். காரில் இருந்து இறங்குங்கள் என்றார் டிரைவர். இதனால் அதிர்ச்சி அடைந்தேன். பாதி வழியில் இறங்க சொன்னால் எப்படி இறங்க முடியும்? என்றேன். உடனே காரை எதிர்பக்கமாகத் திருப்பி, டிரைவரின் ஏரியாவுக்கு சென்றார். அங்கு என்னிடம் தவறான முறையில் நடந்துகொண்டார். காரில் இருந்து இறங்கிய அவர், பின் பக்க கதவைத் திறந்து என் கையை பிடித்து வெளியே இழுத்தார். இதனால் கோபமடைந்த நான் கத்தத் தொடங்கினேன். உதவிக்கு ஆட்களை அழைத்தேன். ஆனால், அவர் அவர் நண்பர்களை அழைத்து எனக்கு மிரட்டல் விடுத்தார் என்று எழுதி, டிரைவரின் போன் நம்பர், புகைப்படம் உள்ளிட்டவற்றை யும் முகப்புத்தகத்தில் குறிப்பிட்டார்.

பின்னர் எனது அப்பாவுக்கு தகவல் தெரிவித்துவிட்டு போலீசில் புகார் செய்தேன். இந்த சம்பவம் தேவ் தாஸ் ரெஸ்டாரண்ட் அருகில் 8.15 மணியில் இருந்து 8.45 மணிக்குள் நடந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவில்லை. இதுபோன் று வேறு யாருக்கும் நடக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து ஸ்வஸ்திகா கொடுத்த புகாரின் பேரில், உபேர் டிரைவர் ஜம்ஷத் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தாவில் மாடலும், நடிகையுமான உஷோஷி சென்குப்தா கடந்த மாதம் ஒரு கும்பலால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப் பானது. இந்நிலையில் மற்றொரு நடிகைக்கு நடந்துள்ள இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.