12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 599 மதிப்பெண் எடுத்த திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலிக்கு வைர தோடு பரிசளித்துள்ளார் விஜய்.
நீட் மட்டும் உலகம் கிடையாது - விஜய் பேச்சு
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தவெக சார்பில் விருது வழங்கும் விழா மாமல்லபுரம் தனியார் விடுதியில் நடந்து நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 88 தொகுதிகளைச் சேர்ந்த 600 மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய தவெக தலைவர் விஜய், “ஒரு படிப்பில் மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து அதில் மட்டும் சாதிக்க வேண்டும் என்ற அழுத்தம் தேவையில்லை. நீட் மட்டும்தான் உலகமா? நீட்டைத் தாண்டியும் உலகம் இருக்கிறது. அதில் கற்றுக் கொள்ள விஷயங்கள் நிறைய இருக்கிறது.
ஊழல் செய்யாதவர்களை தேர்ந்தெடுங்கள் - விஜய் அறிவுரை
நீங்கள் அனைவரும் ஜனநாயக கடையமையை சரியாக செய்யுங்கள். அது ரொம்ப எளிமையான விஷயம். இதுவரை ஊழல் செய்யாத நம்பிக்கையானவர்களை தேர்ந்தெடுங்கள் ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள். அந்த கலாச்சாரத்தை ஊக்குவிக்காதீர்கள். அடுத்த வருடம் வண்டி வண்டியாக வந்து பணத்தை கொட்டுவார்கள். அது உங்களிடமிருந்து கொள்ளையடித்த பணம். அதை என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு சரியாகத் தெரியும். உங்கள் குழந்தைகள் மேல் எந்த அழுத்தத்தையும் போடாதீர்கள். அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை தெரிந்து அவர்களை வழிநடத்துங்கள்.
சாதி, மதத்தை ஒதுக்கி வையுங்கள்
பிரிவினைவாத சிந்தனை பக்கம் போய் விடாதீர்கள். இயற்கையின் வெயில், மழையில் சாதி இருக்கா? விவசாயிகள் சாதி, மதம் பார்த்தா விதைக்கிறார்கள்? போதைப் பொருளை ஒதுக்கி வைப்பது போல் சாதி, மதத்தையும் ஒதுக்கி வைத்து விடுங்கள். தந்தை பெரியாருக்கே சாதி சாயம் பூச முயற்சிக்கிறார்கள். ஒன்றிய சிவில் சர்வீஸ் தேர்வில் சாதி ரீதியான கேள்விகளை கேட்டு வைத்திருக்கிறார்கள். இதையெல்லாம் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த உலகத்தில் எது சரி தவறு என்று அலசி ஆராய்ந்தாலே நல்லபடியாக வாழலாம். தொழில் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் யோசிங்கள். AI உலகத்தை எதிர்கொள்ள அது ஒன்றே வழி என பேசி முடித்தார்.
மாணவிக்கு வைர தோடு வழங்கிய விஜய்
பின்னர் விருது வழங்கும் விழா தொடங்கப்பட்டது. இதில் திண்டுக்கலைச் சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 599 எடுத்திருந்த நிலையில், அவருக்கு வைரத்தோடு அளித்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டார் விஜய். அவரைத் தொடர்ந்து அரியலூரைச் சேர்ந்த சோபியா என்ற மாணவி 500-க்கு 499 மதிப்பெண் எடுத்த நிலையில் அவருக்கும் வைர தோடு பரிசாக வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்குள் விருது வழங்கும் நிகழ்ச்சியை முடிக்க விழா ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
