நடிகர் விஜய் இந்த வாரம் சனிக்கிழமை பிரச்சாரத்தை கரூர் மற்றும் நாமக்கல்லில் மேற்கொள்ள உள்ள நிலையில், விஜய்க்காக தவெக நிர்வாகி ஒருவர் சூலம் ஒன்றை பரிசாக கொடுக்க உள்ளார்.

Vijay Namakkal Campaign : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தற்போதே தொடங்கிவிட்டது. இதற்காக கடந்த செப்டம்பர் 13-ந் தேதி முதல் வார வாரம் சனிக்கிழமை ஒவ்வொரு ஊராக சென்று அங்கிருக்கும் மக்களை சந்தித்து, அவர்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் விஜய். இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பிரச்சார பஸ்ஸில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் விஜய்.

அந்த வகையில் செப்டம்பர் 13-ந் தேதி திருச்சி, அரியலூரில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய், அடுத்த வாரம் நாகப்பட்டிணம், திருவாரூர் உள்ளிட்ட பகுதியில் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டார். விஜய் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அடுத்ததாக இந்த வாரம் கரூர் மற்றும் நாமக்கல்லில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் விஜய். இதற்காக அங்கு காலை முதலே விஜய் ரசிகர்களும் தவெக நிர்வாகிகளும் குவிந்த வண்ணம் உள்ளனர்.

விஜய்க்கு சூலாயுதம் பரிசு

இந்த நிலையில், நாமக்கல்லில் விஜய்யை பார்க்க தவெக நிர்வாகி ஒருவர் சூலத்துடன் வந்திருக்கிறார். நாகப்பட்டிணத்தில் விஜய்க்கு ரசிகர் ஒருவர் வேல்-ஐ பரிசாகி வழங்கி இருந்த நிலையில், நாமக்கல்லை சேர்ந்த தவெக நிர்வாகி, தான் சூலாயுதத்தை விஜய்க்கு பரிசாக வழங்க இருப்பதாகவும், இதற்காக திருச்சியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அங்கிருந்து மூன்று நாட்கள் இந்த சூலாயுதத்துடன் பாதயாத்திரையாக நாமக்கல் வந்திருப்பதாக அவர் கூறினார்.

நாமக்கல் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் தான் விஜய்க்கு சூலாயுதத்தை பரிசளிக்க உள்ளார். தளபதி ஆட்சிக்கு வந்து, தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பது தமிழக மக்களின் விருப்பமாக உள்ளது. அது கட்டாயம் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நிறைவேறும் என இளங்கோவன் தெரிவித்துள்ளார். செல்லும் இடமெல்லாம் மக்களின் ஆதரவு விஜய்க்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.