இது ஃபாசிச அணுகுமுறை; விகடன் இணையதளம் முடக்கப்பட்ட விவகாரத்தில் கொந்தளித்த விஜய்
விகடன் செய்தித் தளம் முடக்கப்பட்ட விவாகரத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அப்போது அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்து சில முக்கிய விவகாரங்கள் பற்றி பேசினார். ஆனால் அப்போது அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள் கைவிலங்கோடு அழைத்து வரப்பட்ட விவகாரம் தொடர்பாக ட்ரம்பிடம் மோடி பேசாமல் இருந்ததை கண்டிக்கும் விதமாக விகடன் ப்ளஸ் என்கிற இணைய இதழில் பிரதமர் மோடி - டிரம்பின் முன் கைவிலங்கோடு அமர்ந்திருக்கும்படியான கார்ட்டூன் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அரசிடம் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விகடன் செய்தித் தளம் இயங்கவில்லை. மத்திய அரசு தான் விகடன் செய்தித் தளத்தை முடக்கியதாக செய்திகள் பரவத் தொடங்கின. ஆனால் தங்கள் தளத்தை முடக்கியதற்கான எந்த ஒரு அறிவிப்பும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை என விகடன் விளக்கம் அளித்துள்ளது. ஒரு வேளை மத்திய அரசால் தங்கள் தளம் முடக்கப்பட்டு இருந்தால் அதை சட்டப்படி எதிர்கொள்வோம் என விகடன் தரப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்... விஜய் போன்ற புகழ்பெற்ற நடிகருக்கு பாதுகாப்பு கொடுப்பதை பெரிதாக எடுத்துக்க வேண்டாம் ! சீமான் பேட்டி!
விகடன் செய்தித் தளம் முடக்கப்பட்ட விவாகரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன் எக்ஸ் தளம் வாயிலாக தன் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.
அவர் போட்டுள்ள பதிவில், “ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?” என கேள்வி எழுப்பி உள்ளார்.
அதேபோல் மும்மொழிக் கொள்கை விவகாரம் தொடர்பாக அவர் போட்டுள்ள பதிவில், “மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே. ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்” என உறுதி அளித்துள்ளது.
இதையும் படியுங்கள்... விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு ! விஜய்க்கு திடீரென வழங்கப்பட்டது ஏன்? வெளியான தகவல் !