தன்னுடைய ஈடு இணையில்லா காமெடி,எழுத்து, மற்றும் நடிப்பின் மூலம், பல லட்சம் பேரை சிரிக்க வைத்தவர் கிரேஸி மோகன். 66 வயதாகும் இவர், மாரடைப்பு காரணமாக இன்று பிற்பகல் 2 மணியளவில் காலமானார்.

இவர் இறந்த செய்தி அறிந்து, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் சமூக வலைத்தளம் மூலம் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தற்போது  அமமுக தலைவர், டிடிவி தினகரன் ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளது... "40 ஆண்டுகளாக நாடக மற்றும் திரை  உலகில் ஏராளமான சாதனைகளைப் புரிந்தவர். நகைச்சுவை உணர்வை வாழ்க்கை முறையாகவே கொண்டாடி, அதன்மூலம் பலரின் கவலைகளைப் போக்கிய திரு.மோகன் அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்". 

மற்றொரு பதிவில் "புகழ் பெற்ற நகைச்சுவை வசனகர்த்தாவும், நடிகருமான திரு.கிரேசி மோகன் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நாடக மேடைகளிலும், சின்னத்திரையிலும், திரையுலகிலும் லட்சோபலட்சம் பேரை தன்னுடைய நகைச்சுவை ஆற்றலால் மனம் விட்டு சிரிக்க வைத்தவர் கிரேசி மோகன்" என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் கிரேஸி மோகன் மற்றும் அவருடைய சகோதரர் இருவரும், டிடிவி தினகரனை அவருடைய வீட்டில் சந்தித்தனர். இதனால் கிராஸி மோகன் அமமுக கட்சியில் இணைந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவித்தார்.