'நான் காலேஜ் படிக்கிறப்ப இந்தம்மா தான் டாக் ஆப் த டவுன் , இன்னைக்கு பாதி கிழவன் ஆயாச்சு,இன்னைக்கும் இந்தம்மா தான் டாக் ஆப் தி டவுன்.ஏதோ லேகியம் சாப்பிட்டு வயசு இல்லாம பண்ணிடீங்கன்னு உளவுத்துறை சொல்லுது மேடம்! இன்னும் 16 வருஷத்துக்கு இதே போல இருங்க’ என்று வலைதளங்கள் முழுக்க வாழ்த்துகள் குவிய இன்று தனது பதினாறாவது வயதில், அதாவது திரைத்துறையில், காலடி எடுத்துவைக்கிறார் த்ரிஷா.

அதற்கு முன்னர் ஓரிரு படங்களில் ரிச் கேர்ளாக எட்டிப்பார்த்திருந்தாலும், 2002ம் ஆண்டு இதே நாளில்தான் ‘மவுனம் பேசியதே’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் த்ரிஷா. இந்த 16 வருடங்களில் 61 படங்களில் நடித்து முடித்திருக்கும் அவர்,  மார்க்கெட் இன்றி அவர் வீட்டில் அமர்ந்திருந்த காலம் என்று ஒன்று இல்லவே இல்லை.

‘பேட்ட’ படத்துக்கு அவர் ஜோடி சேர்ந்து நடிக்காத ஒரே ஸ்டார் நம்ம சூப்பர் ஸ்டார்தான். அந்தக் குறையும் நீங்கிய நிலையில், சினிமாவில் அவர் 16 வது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருப்பதை ரசிகர்கள் வலைதளங்களில் கொண்டாடித் தீர்த்து வருகிறார்கள். 

ரசிகர்களின் வாழ்த்துகளுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் அளித்திருக்கும் பதிலில்...’அனைவருக்கும் மிக்க நன்றி. நீங்கள் பகிரும் குறுஞ்செய்திகளும், வீடியோக்களும் அருமை; இனிமையான 16 வருடங்களில் என்னை நான் கொண்டாடுவதைவிட அதிகமாகவே நீங்கள் கொண்டாடுகிறீர்கள். உங்களைப் போன்ற ரசிகர்களால் ஆசிர்வதிக்கப்பட்டவளாக இருக்கின்றேன்.எனக்கு இதவிட வேறென்ன வேண்டும்” என்று நெகிழ்கிறார்.