T.Rajandhar Advised his son Silambarasan

’அது ஒரு டி.ராஜேந்தர் காலம்’ என்று தமிழ் சினிமாவில் ஒரு ஜானர் இருந்தது. அல்லு தெறிக்கும் சென்டிமெண்ட்ஸ், அசத்தல் செட்டிங்ஸ், கேட்டதும் பிடித்துப் போகும் பாடல்கள், தெறி வசனங்கள், ஆக்ரோஷ ஆக்‌ஷன் பிளாக்ஸ், நெருடலை தராத காதல் என்று இன்ச் பை இன்ச் இம்ப்ரஸ் செய்வதாய் இருந்தன டி.ராஜேந்திரனின் படங்கள். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை...உள்ளிட்ட அத்தனை முக்கிய போர்ஷன்களையும் தன் தோளில் தாங்கி, அந்த கப்பலை அட்டகாசமாக கரையேற்றுவார் டி.ஆர். அதனால்தான் அவரை தமிழ் சினிமாவின் அஷ்டாவதானி என்று வர்ணித்தார்கள். 

ஆனால் தனியாவர்த்தனம் செய்த அந்த திறமையான டி.ஆர். யானை சமீப சில காலமாக அடி சறுக்கி அமர்ந்திருக்கிறது. சொதப்பல் அரசியல் மூவ்களால் அவர் சிரிக்கப்பட்டது தனி கதை. ஆனால் சமீப நெடுங்காலமாக சினிமா உலகில் அவருக்கு எந்த எழுச்சியுமில்லாமல் போயிருக்கிறது. இதற்கு முக்கிய மற்றும் மூல காரணம் அவரது மகன் சிம்பு. 

மாஸ்டர் ஆக்டராக இருந்தபோதே தமிழ் சினிமா உலகில் சிம்புவுக்கென்று தனி ரசிகப்பட்டாளம் உருவானது. இளைஞரானதும் நிச்சயம் ரஜினியளவுக்கு தடம் பதிப்பார் என்று ஏகபோகமாக எதிர்பார்க்கப்பட்டார். நினைத்ததுபோல் ஆரவாரமாக நுழைந்த சிம்புவுக்கு ரசிகர்களும், தமிழக சினிமா நேயர்களும் எந்த குறைவுமில்லாமல்தான் வரவேற்பு தந்தனர். ஆனால் முழுக்க முழுக்க தனது குணத்தால் தரை தட்டி நிற்கிறார் சிம்பு.

‘பங்சுவாலிட்டி கிடையாது என்பதில் துவங்கி சிம்பு மேல் ஆயிரத்தெட்டு குறைகள்.’ பெரிய சறுக்கலுக்குப் பின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மூலம் மீண்டும் எழுந்தவர் ஒரு பெரிய ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் மீண்டும் தன் சரிவுக்கு தானே காரணமாகி கவிழ்ந்திருக்கிறார். 

சிம்புவின் வீழ்ச்சி டி.ஆர்.ரை வெகுவாக பாதித்திருக்கிறது. தோள் தாண்டிய மகனிடம் டி.ராஜேந்தரால் பெரிதாக எதையும் பேசி சாதித்துவிட முடியவில்லை. ஆனால் சமீப காலமாக ஒன்றை மட்டும் மகனிடம் அழுத்தி அழுத்தி அவர் சொல்லிக் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள் அந்த வீட்டுக்கு நெருக்கமானவர்கள்.

அதாவது “இயக்குநர்களின் நாயகனா நீ இருந்த எந்த படமும் தோத்ததில்லைடா. கோயில், தொட்டி ஜெயா, வானம், வி.டி.வி. அச்சம் என்பது மடமையடா._ன்னு எல்லாமே பதிச்சிருக்குது தனி தடம். தமிழ் சினிமா இன்னமும் வெச்சிருக்குதுடா தனி இடம். டைரக்டர்களின் பேச்சை தாண்டாம கதைக்கு ஏத்த மாதிரி நடிச்சேன்னா நிச்சயமா உன் இடத்தை நீ பிடிச்சுடலாம்.’ என்பதுதான் அது.

 சிம்பு இதை காதில் ஏற்றிக் கொண்டாரோ இல்லையோ, ஆனால் மகனை தூக்கி நிறுத்தும் முயற்சியில் இறங்கிவிட்டார் டி.ஆர். சிம்பு, நயன் காம்போவில் உருவான ‘இது நம்ம ஆளு’ தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட கையோடு “தெலுங்கு திரையுலகி, 15% தான் ஜி.எஸ்.டி. பிடிக்கப்படுகிறது. ஆனால் தமிழில் 30% பிடிக்கப்படுகிறது. இதனால் தமிழ் சினிமா மோசமான நிலையில் உள்ளது.” என்று புலம்பித் தீர்த்திருக்கிறார். 

தல! ஜி.எஸ்.டி. பஞ்சாயத்தை அரசாங்கம் நினைச்சா தீர்த்துடலாம் ஆனா உங்க ‘எஸ்.டி.ஆர்.’ தலையெழுத்தை யார் திருத்தப்போறது?_ என்று கமெண்ட் அடிக்கிறது தமிழ் திரையுலகம்.