படு ரிஸ்கான தீ விபத்துக் காட்சியில் டூப் போடாமல் நடித்த தனுஷ் பட வில்லனும், பிரபல மலையாள ஹீரோவுமான டொவினோ தாமஸ் தீ விபத்தில் சிக்கி காயமைடந்தார். படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அவர் உடனே மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார்.

பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ். இவர் கூதாரா, யூ டூ புரூட்டஸ், என்னுநின்டே மொய்தீன், சார்லி உட்பட பல படங்களில் நடித் துள்ளார். தமிழில், அபியும் நானும், தனுஷ் நடித்த மாரி 2’ ஆகிய படங்களிலும்நடித்துள்ளார். ‘மாரி2’ படத்தின் முக்கிய வில்லனாக வந்த இவரது நடிப்பு பரபரப்பாகப் பேசப்பட்டது.  இவர் இப்போது,எடக்காட் பட்டாலியன் 06(Edakkad Battalion 06) என்ற மலையாளப் படத்தில் நடித்துவருகிறார். ஸ்வப்னேஷ் கே நாயர் இயக்கும் இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன், ரேகா, சுதீஷ், அபு சலீம் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் சண்டை காட்சி படப்பிடிப்பு கோழிக்கோடு பகுதியில் நடந்து வந்தது. நேற்று நடந்த படப்பிடிப்பில், கமாண்டோ வீரரான டோவி னோ தாமஸ், உடலில் தீ பற்றிய நிலையில் துப்பாக்கியால் சுடுவது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது. தீ உடலில் படாதவாறு அவருக்கு உடை ஏற்பட்டு செய்யப்பட்டிருந்தது. டோவினோ நடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, தீ அவர் மீது பற்றியது. இதனால் அவர் கையில் வைத்திருந்த துப்பாக்கியை வீசிவிட்டு தரையில் விழுந்து தீயை அணைக்க முயன்றார். இதைக் கண்ட படக்குழுவினர் உடனடியாக ஓடி, தீயை அணைத்து அவரை மீட்டனர்.அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதுபற்றி படக்குழு கூறும்போது, இயக்குநர் சொன்னதையும் மீறி டூப் இல்லாமல், தானே நடிப்பதாக டோவினோ தாமஸ் கூறினார். அது, ரிஸ்கான காட்சிதான். எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டு விட்டது. இருந்தாலும் பயப்படும்படியாக எதுவும் இல்லை. விரைவில் குணாமாகிவிடுவார் என்றனர்.