பல போராட்டங்களுக்கு பிறகு பாலிவுட் கொண்டாடும் நடிகையாக மாறியுள்ள டாப்ஸி, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார். எதையும் வெளிப்படையாக துணிச்சலுடன் பேசும் குணம் கொண்ட அவர், அண்மையில் அதிரவைக்கும் கருத்தைக்கூறி இந்திய அளவில் ட்ரெண்டானார். 

சில தினங்களுக்கு முன்பு கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் டாப்ஸி பங்கேற்றார். அங்கு ஆங்கிலத்தில் பேசிய அவரிடம் ஒரு செய்தியாளர், நீங்கள் இந்தி பட நடிகை தானே இந்தியில் பேசுங்கள் என்றார். 

அதற்கு டாப்ஸியோ, நான் இந்தியில் பேசினால் அனைவருக்கும் புரியாது. மேலும் நான் தமிழ், தெலுங்கு பட நடிகை கூட. அந்த மொழிகளில் வேண்டுமானால் பேசட்டுமா என்று கேட்டு நெத்தியடி கொடுத்தார். டாப்ஸியின் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக, பலரும் அவரின் துணிச்சலை பாராட்டினர். 

இப்படி, தனது நடிப்பால் மட்டுமின்றி துணிச்சலாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் அவர், தற்போது ஒரு பேட்டியில் மற்றொரு அதிரவைக்கும் கருத்தைக்கூறி அதிர்ச்சியடைய வைத்துள்ளார். 

பிரபல பாலிவுட் நடிகை நேஹா தூபியா நடத்தி வரும் டிவி நிகழ்ச்சியில் டாப்ஸி பங்கேற்றார். அப்போது, நேஹா சில கேள்விகளை அவரிடம் கேட்க மனதில் பட்டதை சொன்னார் டாப்ஸி. இதில், பாலிவுட்டில் எந்த நடிகைக்கு புது ஸ்டைலிஸ்ட் தேவை என்று நினைக்கிறீர்கள் என நேஹா கேட்க டாப்ஸியோ கொஞ்சம் கூட யோசிக்காமல் ஊர்வசி ரவ்தெலாவின் பெயரை கூறி அசரடித்தார். 

"ஊர்வசி ஃபிட்டாக உள்ளார். ஆனால் உடல் தெரியும்படியான உடைகள் இல்லாமல் நல்ல உடைகளில் அவரை பார்க்க விரும்புகிறேன்" என டாப்ஸி தெரிவித்துள்ளார். அவரது பதிலை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தாலும், டாப்ஸியின் துணிச்சலை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.