Asianet News TamilAsianet News Tamil

தயாரிப்பாளர் சங்கத்தைக் கைப்பற்ற விஷாலுக்கு 30 நாட்கள் கெடு விதிக்கும் தமிழக அரசு...

தயாரிப்பாளர் சங்கத்தில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக இன்னும் 30 நாட்களுக்குள் சரியான விளக்கத்தைக் கொடுக்காவிட்டால் சங்க நிர்வாகத்தில் தமிழக அரசு தலையிட நேரிடும் என்று விஷால் மற்றும் நிர்வாகிகளுக்கு தமிழக அரசு எச்சரித்துள்ளது.

tn govt warns vishal
Author
Chennai, First Published Mar 9, 2019, 1:06 PM IST

தயாரிப்பாளர் சங்கத்தில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக இன்னும் 30 நாட்களுக்குள் சரியான விளக்கத்தைக் கொடுக்காவிட்டால் சங்க நிர்வாகத்தில் தமிழக அரசு தலையிட நேரிடும் என்று விஷால் மற்றும் நிர்வாகிகளுக்கு தமிழக அரசு எச்சரித்துள்ளது.tn govt warns vishal

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மீது அந்தச் சங்கத்தின் முன்னாள் பொருளாளரான ஆர்.ராதாகிருஷ்ணன் பல்வேறு புகார்களை தமிழக அரசின் சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் அளித்திருந்தார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் இது குறித்து அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆர்.ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழக அரசு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கைகள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டது. மேலும் மாவட்ட பதிவாளர், பதிவுத் துறை தலைவர் ஆகியோரிடமும் இது குறித்து அறிக்கை கேட்கப்பட்டது. அந்த அறிக்கையின் மூலம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தின் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் சில குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதாக தமிழக அரசுக்குத் தெரிய வந்துள்ளது.tn govt warns vishal

இதையடுத்து இப்போது தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கு தமிழக அரசின் வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறையின் முதன்மை செயலாளரான கா.பாலசந்திரன் விளக்க நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

அதில்,...2017-ம் ஆண்டில் இருந்து இந்த சங்கத்தின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் கூட்டப்படவில்லை. ஆவணங்களில் பதிவாளரின் ஒப்புதலைப் பெறாமல் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் 16(3), 26 ஆகிய பிரிவுகளை மீறியுள்ளீர்கள். சங்கத்தின் அனைத்து புத்தகங்கள், மற்றும் ஆவணங்கள் ஆகியவை சென்னை தியாகராய நகர் அலுவலகத்தில்தான் பராமரிக்கப்படுகின்றன. பதிவு செய்யப்பட்டுள்ள அந்த அலுவலகத்தின் சூழ்நிலை மாற்றம் பற்றிய தகவல்களை சங்கம் பதிவு செய்யவில்லை.

சங்கத்தின் குறிப்புகள் மற்றும் கோப்புகளுக்கு செயற்குழுவின் ஒப்புதலை பெறவில்லை. தியாகராயநகரில் தனி அலுவலகம் எடுக்கப்பட்டு, அதற்கு முன் பணம் என்ற பெயரில் 16 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டில் இருந்து வாடகையாக மாதம் 2 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. புகார்தாரர் கூறியதுபோல இது ஒருமித்த முடிவு கிடையாது. தேவையான ஆவணங்களை பதிவு அலுவலகத்தில் வைத்துக் கொள்ளவில்லை. முகவரி மாற்றத்துக்கான விண்ணப்பத்தை இதுவரை பதிவாளரிடம் அளிக்காமல் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் 29(3), 13 ஆகிய பிரிவுகளை மீறியுள்ளீர்கள்.

சங்க உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம், பரிசுத் தொகை, மகன், மகள் திருமண உதவித் தொகை, குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, தீபாவளி பரிசுத் தொகை என்ற வகைகளில் சங்க நிதியை பகிர்ந்துள்ளர்கள். அது, சங்கத்தின் துணை விதிகளுக்கும் சட்டங்களுக்கும் முரணாக காணப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் 25-ம் பிரிவு மீறப்பட்டுள்ளது.tn govt warns vishal

இந்நிலையில், சட்டப்படி உங்களுக்கு விளக்கம் அளிக்க ஒரு வாய்ப்பு தரப்படுகிறது. எனவே, சிறப்பு அதிகாரி ஒருவரை அரசே நியமித்து உங்கள் சங்கத்தின் மேலாண்மை விவகாரங்களை ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு இன்னும் 30 நாட்களுக்குள் நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், உங்களது சங்கத்தை நிர்வகிக்க அரசுத் தரப்பில் இருந்து சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு சங்கத்தின் மேலாண்மை அதிகாரம் தமிழக அரசால் எடுத்துக் கொள்ளப்படும்..” இவ்வாறு அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான விஷால் மீது ஏற்கெனவே தமிழக ஆளும் கட்சியும், ஆள்பவர்களும் கோபத்தில் இருந்து வரும் நேரத்தில் எழுந்திருக்கும் இந்த நடவடிக்கை, விஷாலை தமிழ்த் திரையுலகத்தில் முடக்கிப் போட ஆளும் கட்சி செய்யும் முயற்சியாகவே கருதப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios