தமிழ் சினிமா மீது பாராமுகமாக இருந்த எடப்பாடி அரசு தனது கருணைப் பார்வையை மெல்ல காண்பிக்கத்துவங்கியுள்ளது.அதன் முதல் கட்டமாக பையனூரில் நீண்ட நாள் கிடைப்பில் கிடந்த அம்மா அரங்க வேலைகளை மீண்டும் துவங்க ஃபெப்ஸி தலைவர் செல்வமணியிடம் ரூ 1 கோடி நிதி வழங்கினார் முதல்வர். இச்செய்தியை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், பையனூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற திரைப்பட கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர்.  நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் திறப்பு விழா கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நடைபெற்றது. எம்.ஜி.ஆர் படப்பாடல்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்ற அவ்விழாவில்,  தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு  தளத்தின் அருகில் அரங்கம் கட்டித்தருமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அக்கோரிக்கையை ஏற்று, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி  வழங்கப்படும் என்று  அந்நிகழ்ச்சி மேடையிலேயே முதல்வர் அறிவித்திருந்தார். 

நிகழ்ச்சி நடந்து முடிந்து ஓராண்டுக்கும் மேல் ஆகியும் ஏனோ அந்த  நிதி வழங்கப்படவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த குழப்பங்கள், நடிகர் சங்க அடிதடிகளால் சினிமாத் துறையை அரசு சுத்தமாகக் கண்டுகொள்ளாமல் இருந்தது. இந்நிலையில் இன்று ஃபெப்ஸி தலைவர் ஆ.கே.செல்வமணி முக்கிய நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்த நிலையில்,  அறிவிக்கப்பட்ட நிதியில் முதல் கட்டமாக  1 கோடி ரூபாய்க்கான காசோலையை ஆர்.கே.  செல்வமணியிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்  துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் க. சண்முகம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.வி.  உதயகுமார், இயக்குநர் மனோஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே அம்மா அரங்கத்தை ஒட்டி அமைந்துள்ள 15 ஏக்கரா நிலத்தில் திரைத்துறையைச் சேர்ந்த 6 ஆயிரம் பேருக்கு நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளது.