மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘தக் லைஃப்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படம் குறித்து ரசிகர்கள் கூறிய கருத்துக்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

‘தக் லைஃப்’ குறித்து ரசிகர்கள் கூறிய விமர்சனம் 

சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம் கமல் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘தக் லைஃப்’. இந்தப் படத்தில் கமலுடன் சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர் ரகுமான் படத்திற்கு இசையமைத்திருந்தார். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ரெட் ஜெயன்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தன. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் கதை குறித்தும், ரசிகர்கள் கூறிய கருத்துக்கள் குறித்தும் பார்க்கலாம்.

‘தக் லைஃப்’ படத்தின் கதை என்ன?

டெல்லியில் ரியல் எஸ்டேட் தாதாவாக வலம் வரும் ரங்கராய சக்திவேல், இறந்து போன பேப்பர் போடுபவரின் குழந்தையான அமரனை எடுத்து வளர்க்கிறார். ரங்கராய சக்திவேலுக்கு பின்னர் அவரது இடத்தை அடைய அமரன் துடிக்கிறார். தலைமையை எடுக்க நினைக்கும் அமரனை பார்த்து சக்திவேலுக்கு பொறாமை ஏற்படுகிறது. அமரனை சுற்றி இருப்பவர்கள் அவரை தூண்டிவிட சக்திவேலை கொலை செய்ய முயற்சிக்கிறார். உயிர் தப்பித்து வரும் சக்திவேல், அமரன் உட்பட அனைவரையும் பழி வாங்குகிறார். இதுதான் ‘தக் லைஃப் திரைப்படத்தின் கதை.

படம் பற்றிய பாசிட்டிவ் விமர்சனம்

கமல் மற்றும் சிம்புவின் காட்சிகள் படத்தை உயிரோட்டமாக வைத்திருக்கிறது. முதல் பாதியை விட இரண்டாம் பாதி மிக மெதுவாக செல்வதாகவும், அதை இன்னும் ஆழமாக மாற்றி இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். திரிஷாவின் கதாபாத்திரம் பெரிய அளவிற்கு முக்கியத்துவம் இல்லை. ரங்கராஜ சக்திவேலின் மனைவியாக அபிராமி தனது கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார். நாசர், அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். ஏ.ஆர் ரகுமானின் இசை படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

‘தக் லைஃப்’ பெயர் வைத்தது ஏன்? ரசிகர்கள் கேள்வி

படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த ரசிகர்கள் பலரும் இது ஏற்கனவே பார்த்து அடித்தி துவைத்த டெம்ப்ளேட் தான், புதிதாக எதுவும் இல்லை என கருத்து தெரிவித்தனர். மேலும் முதல் பாதியை விட இரண்டாம் பாதி ஆமை வேகத்தில் நகர்வதாகவும், பொறுமை இருப்பவர்களால் மட்டுமே இந்த படத்தை பார்க்க முடியும் என்றும் கருத்து தெரிவித்தனர். இந்தப் படம் மணிரத்னம் படம் போலவே இல்லை, இதற்கு செக்கச் சிவந்த வானம் பாகம் இரண்டு என பெயர் வைத்திருக்கலாம். எதற்காக ‘தக் லைஃப்’ என்று பெயர் வைத்தார்கள் எனத் தெரியவில்லை என்று ரசிகர்கள் கூறினர்.

படம் பார்க்க பொறுமை வேண்டும் - ரசிகர்கள் கருத்து

இன்னும் சிலர் படம் நன்றாக இருப்பதாகவும், ஒருமுறை இந்த படத்தை பார்க்கலாம் என்றும் கருத்து தெரிவித்தனர். கமல் மற்றும் சிம்புவுக்காக இந்த படத்தை பார்க்க வந்ததாக சிலர் கருத்து தெரிவித்தனர்.