தீபாவளி ரேஸில் இப்போதைக்கு விஜய்யின் ‘பிகில்’விஜய் சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’கார்த்தியின் ‘கைதி’ ஆகிய மூன்று படங்கள் களமிறங்கவிருக்கும் நிலையில் மூன்றாவது படம் குறித்த செய்திகள் மற்ற இருபடங்களுக்கு பீதியைக் கிளப்பி வருகின்றன. சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நாயகன் கார்த்தி ஆகியோரது நம்பிக்கையான பேச்சும் அச்செய்தியை உறுதி செய்கிறது.

அவ்விழாவில் பேசிய கார்த்தி,“வித்தியாசமான கதைகளை எழுதும் இயக்குநர்களுக்கு எப்போதும் நான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன். இப்படி தான் சுவரை வைத்து மெட்ராஸ் கதை எழுதப்பட்டிருந்தது. அதைப்படித்த போது ஒரு சுவரை வைத்து கதை எழுத முடியுமா? என்று தோன்றியது. ஆனால், அதில் இருந்த அரசியல் எனக்கு தெரியவில்லை. ’தீரன் அதிகாரம் ஒன்று’ படமும் அப்படித்தான். அந்த வகையில், ‘கைதி’யும் அப்படி ஒரு வித்தியாசமான படம் தான்.

‘மெட்ராஸ்’ படம் கதையாக எனக்கு பிடித்திருந்தாலும், அந்த கதாபாத்திரம் மீது எனக்கு பெரிய விருப்பம் இல்லை. ஆனால், ‘கைதி’ படத்தின் கதாபாத்திரம் எனக்கு பிடித்த கதாபாத்திரம். ஒரு லாரி டிரைவர். சிறையில் 10 வருடங்கள் இருந்துவிட்டு வெளியே வரும் போது அவரது மன நிலை எப்படி இருக்கும். இதற்காக பல வருடங்கள் சிறையில் இருந்து வெளியே வந்தவர்களிடம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியிருக்கிறார். கலர் டிரெஸ் போட்டுட்டு போனாலே அவர்களுக்கு வித்தியாசமாக இருக்குமாம். நாயை கூட வெறித்து பார்த்துக் கொண்டிருப்பார்களாம். காரணம், எந்தவித வெளியுலக தொடர்போ, வேறு எதையும் பார்க்காமல், வெறும் சுவரை மட்டுமே பல ஆண்டுகளாக பார்த்துக் கொண்டிருந்த அவர்கள் வெளியில் வரும் போது அனைத்துமே புதிதாகவே இருக்கும் என்று கூறினார்கள். ரொம்ப நாளாகவே லாரி ஓட்ட வேண்டும் என்று ஆசை. அது இந்த படத்தில் நிறைவேறியது. அப்போது லாரி ஓட்டுநர்களின் கஷ்டம் புரிந்தது.

இந்த படம் ரொம்பவே வித்தியாசமான படம். படம் நன்றாக வர வேண்டும், அதற்காக தொழில்நுட்ப ரீதியாக என்னவேண்டுமானாலும் செய்ய சொன்னேன், எனக்கே கூட லைட்டிங் வேண்டாம் என்று கூட சொன்னேன். முழுக்க முழுக்க இரவில் மட்டுமே படமாக்கப்பட்ட படம். ஆக்‌ஷன் படங்கள் என்றாலே எனக்கு பிடிக்கும். இந்த படம் முழுவதுமே ஆக்‌ஷன் இருக்கிறது. இந்த படத்தில் நான் ஹீரோ என்பதைவிட ஒரு கதாபாத்திரம் என்று தான் சொல்வேன். நரேன், தினா என்று பலர் மீது இந்த கதை பயணிக்கும். அத்தனை நடிகர்களும் மனதில் நிற்கும் அளவுக்கு கதை அமைந்திருக்கிறது. நிச்சயம் இந்த படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அதே சமயம் ஸ்பெஷல் ட்ரீட்டாக இருக்கும்.” என்றார்.

இப்படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை. அதே போல் பாடல்களும் இல்லை.